Latest News :

’தில்லு இருந்தா போராடு’ திரைப்பட விமர்சனம்

539aede1e3fcb753c4cc29ee5a0eea2f.jpg

Casting : Karthik Doss, Anu Krishna, Vanitha Vijayakumar, Yogi Babu, Mano Bala, MS Baskar, Rajasimman, Chams

Directed By : SK Muralidharan

Music By : G.Sayee Tharshan

Produced By : RP Bala

 

படித்துவிட்டு வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊர் சுற்றி வரும் நாயகன் கார்த்திக் தாஸ், நாயகி அனு கிருஷ்ணாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். சில பிரச்சினைகளுக்குப் பிறகு அனு கிருஷ்ணாவுக்கும் கார்த்திக் தாஸ் மீது காதல் மலர்கிறது. இருவரும் பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இதையடுத்து வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற காதல் மனைவியின் அறிவுரையை கேட்டு தனது சாதனை பயணத்தை தொடங்கும் ஹீரோவுக்கு பலவித எதிர்ப்புகள் வருகிறது. அந்த எதிர்ப்புகளை மீறி அவர் வாழ்க்கையில் எப்படி போராடி வெற்றி பெறுகிறார் என்பதை சொல்வது தான் ‘தில்லு இருந்தா போராடு’ படத்தின் மீதிக்கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் கார்த்திக் தாஸ், நாயகியை விரட்டி விரட்டி காதலிப்பதோடு, காதலுக்காக அவர் எடுக்கும் அதிரடி முயற்சிகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும், போக போக ரசிக்கும்படி இருக்கிறது. நடனம், சண்டைக்காட்சி, நடிப்பு என அனைத்திலும் சிறப்பாக  செயல்பட்டிருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அனு கிருஷ்ணாவுக்கு நடிக்க கூடிய வேடம் மட்டும் இன்றி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். அதை சரியாக பயன்படுத்தி பல இடங்களில் கைதட்டும் அளவுக்கு நடித்திருக்கிறார்.  குறிப்பாக காதல் என்ற பெயரில் தன் பின்னால் சுற்றும் ஹீரோவை வெளுத்து வாங்கி விரட்டியடிக்கும் காட்சிகளில் நடிப்பில் மிரட்டுகிறார். அதே சமயம், தனக்குள் காதல் வந்ததும் மென்மையாக மாறி காதலனிடம் உருகுவதோடு, அவனை மனிதனாக்க முயற்சிக்கும் போது கவனம் ஈர்க்கிறார்.

 

பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வனிதா, வலிமையான கதாபாத்திரத்தில் எளிமையாக நடித்து ஏமாற்றம் அளிக்கிறார்.

 

யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார். சாம்ஸ், மனோபாலா, லொள்ளு சபா மனோகர், எம்.எஸ்.பாஸ்கர் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் விஜய் திருமூலம் கதைக்கு ஏற்றபடி பயணித்திருந்தாலும், பாடல் காட்சிகளை கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக தனக்கு கிடைத்த சாதாரண லொக்கேஷன்களை கூட ரசிக்கும்படி படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

 

ஜி.சாயீ தர்ஷனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.கே.முரளிதரன், அம்மா செண்டிமெண்ட் மற்றும் காதல் இரண்டையும் இணைத்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார்.

 

வாழ்க்கையில் படிப்பு மிக அவசியம் என்பதை வலியுறுத்தும் கதையில், இளைஞர்கள் தீய பழக்கங்களுக்கு ஆளாவதால் சமூகம் எப்படி சீரழிகிறது என்பதையும் சொல்லியிருக்கும் இயக்குநர் சுயநலம் பாராமல் ஒவ்வொருவரும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற மனநிலை கொண்டிருந்தால் இந்த சமூகம் நிச்சயம் நலம் பெறும் என்ற நல்ல கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

படத்தின் நீளம் மற்றும் தேவையில்லாத காட்சிகள் படத்தை தொய்வடைய செய்கிறது. அதை மட்டும் சற்று சரி செய்து சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லியிருந்தால் படம் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சில குறைகளோடு இருந்தாலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லியிருக்கும் இந்த ‘தில்லு இருந்தா போராடு’ படத்தை ஒரு முறை தாராளமாக பார்க்கலாம்.

 

ரேட்டிங் 2/5