Latest News :

’சங்குசக்கரம்’ விமர்சனம்

2c7cd2b48c9dd1c24b52c179c276e5a8.jpg

Casting : Gheetha, Dhilip Subbarayan,

Directed By : Maarison

Music By : Shabir

Produced By : K.Sathish, V.S.Rajkumar

 

அம்மா, மகள் என்று இரண்டு பேய்கள் இருக்கும் அரண்மனையை விற்க முயற்சிக்கும் புரோக்கர் ஒருவர், மந்திரவாதிகள் மூலம் பேய்களை விரட்ட, அந்த அரண்மனைக்குள் நுழைகிறார். அதே சமயம், பல கோடி ரூபாய் சொத்துக்கு உரிமையாளரான சிறுவனை கொலை செய்வதற்காக அவனது பாதுகாப்பாளர்கள் அந்த பேய் அரண்மனைக்குள் அவனை அழைத்துச் செல்ல, சிறுவர்களை கடத்தி பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் கடத்தல்காரரான திலீப் சுப்பராயன் 7 சிறுவர்களை கடத்தி அந்த பேய் அரண்மனையில் அடைத்து வைக்கிறார். 

 

புரோக்கர், சிறுவர்களை கடத்திய திலீப் சுப்பராயண், பணக்கார சிறுவனை கொலை செய்ய திட்டமிடும் இரண்டு நபர்கள், என அனைத்து வில்லன்களும் அரண்மனைக்குள் ஒன்றாகி தங்களுக்குள் டீலிங் ஒன்றை போட்டுக்கொண்டு, தங்களது வேலைகளை முடிக்க நினைக்க, அப்போது எண்ட்ரியாகும் பேய் அவர்களை என்ன செய்தது, அவர்களின் திட்டம் பலித்ததா இல்லையா, என்பது தான் ’சங்குசக்கரம்’ படத்தின் கதை.

 

பிளாஷ்பேக் மற்றும் தங்களை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கும் பேய், என்பது தான் பேய் படங்களின் ரெகுலர் பார்மட் என்றாலும், அதனை மாற்றி வித்தியாசமான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் மாரிசன், குழந்தைகளை மனதில் வைத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

படத்தில் இடம்பெற்ற நடிகர்களில் திலீப் சுப்பராயணும், புன்னகை பூ கீதாவும் ஓரளவு தெரிந்த முகங்கள் என்றாலும், இப்படத்தின் மூலம் ரொம்பவே தெரிந்த முகங்களாகிவிடுவார்கள். அந்த அளவுக்கு தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். மலிங்கா மண்டையுடன் “டாரு டமாரு..” என்ற வசனத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கும் திலீப் சுப்பராயணின் காமெடி ரசிகர்களை கவர்கிறது.

 

ஒளவையின் நெல்லிக்கணி குறித்தும், ”ஒவ்வொரு பாடத்திற்கு ஒவ்வொரு ஆசிரியர் இருக்கும் போது, மாணவர் மட்டும் ஒருத்தராக அந்த பாடத்தை மொத்தமாக ஏன் படிக்க வேண்டும்?” என்று கேள்வி கேட்கும், அந்த சிறுவன் இறுதியாக ரஜினி குறித்து கேட்கும் கேள்வியால், சிரிப்பு சத்தத்தால் தியேட்டரே அதிர்கிறது.

 

பேய் படங்கள் என்றாலே சிறுவர்கள் பயந்த காலம் போய், தற்போது சிறுவர்கள் ரசித்துப் பார்க்கும் படமாக பேய் படங்கள் உருவாகிவிட்ட நிலையில், சிறுவர்களை பார்த்து பேய் பயப்படும் விதமாக அமைத்திருக்கும் காட்சிகள் கலகலப்பாக உள்ளது.

 

படம் முழுவதும் ஒரே இடத்தில் நகர்ந்தாலும், விறுவிறுப்பு குறையாத அளவுக்கு காட்சிகளை வேகமாக நகர்த்த ஒளிப்பதிவாளர் ரவி கண்ணன், இசையமைப்பாளர் ஷபீர், எடிட்டர் விஜய் வேல்குட்டி ஆகியோரது பணி பக்கபலமாக இருந்திருக்கிறது.

 

இப்படித்தான் பேய் படங்கள் இருக்க வேண்டும், என்ற பார்மூலாவை உடைத்து, இப்படியும் ஒரு பேய் படத்தை இயக்கலாம் என்று கோடம்பாக்கத்திற்கு புது பாதையை போட்டுள்ள இயக்குநர் மாரிசனின், திரைக்கதை அமைப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் மேக்கிங் ரீதியாக எந்தவித குறையும் இல்லாமல் படத்தை கச்சிதமாக கொடுத்திருப்பதோடு, குழந்தைகளை குஷிப்படுத்தும் விதமாக இந்த சங்குசக்கரத்தை சுழல விட்டிருக்கிறார்.

 

சீனா மற்றும் அமெரிக்க மந்திரவாதிகள் இசை வாத்தியங்கள் மூலம் பேய்களை அடக்க நினைக்க, அவர்களுக்கு எதிராக இந்திய மந்திரவாதி உடுக்கை அடித்து, பேய்களுக்கு சப்போர்ட் செய்யும் காட்சியும், அந்த இடத்தில் இடம்பெறும் வசனமும், இது பேய் படம் மட்டும் அல்ல சமூகம் சார்ந்த படமும் கூட என்பதை உணர்த்துகிறது. இப்படி படம் முழுவதுமே ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், வசனம் மூலம் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்கள்.

 

மொத்தத்தில், பெரியவர்களுக்கான திகிலை குறைவாக வைத்தாலும், சிறுவர்களுக்கான நகைச்சுவையை அதிலும் அவர்களை வைத்தே அதை செய்திருக்கும் இந்த ‘சங்குசக்கரம்’ அறையாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாடி வரும் சிறுவர்களுக்கு, மேலும் ஒரு கொண்டாட்டமாக உள்ளது.

 

ஜெ.சுகுமார்