Latest News :

’லாக்கர்’ திரைப்பட விமர்சனம்

a6284615bebc585f36b3d4946aff501b.jpg

Casting : Vignesh Shanmugam, Niranjani Ashokan, Nivas, Tajbabu, Prakash

Directed By : Rajasekar.N and Yuvaraj Kannan

Music By : Vygundh Srinivasan

Produced By : Narayanan Selvam Productions

 

தனது நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு மற்றும் மோசடி வேலைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் நாயகன் விக்னேஷ் சண்முகம், நாயகி நிரஞ்சனி அசோகனை கண்டதும் காதல் கொள்கிறார். விக்னேஷின் காதலை ஏற்றுக்கொள்ளும் நிரஞ்சனி, அவரை பற்றிய உண்மைகள் தெரிந்ததும் அவரை பிரிந்து விடுகிறார். காதலிக்காக திருட்டு மற்றும் மோசடி வேலைகளை விக்னேஷ் கைவிட, அவருடன் நிரஞ்சனி மீண்டும் இணைகிறார். இதற்கிடையே காதலிக்காக கைவிட்ட திருட்டு வேலையை அவருக்காகவே மீண்டும் செய்ய வேண்டிய சூழ்நிலை விக்னேஷுக்கு ஏற்பட, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சொல்வது தான் ‘லாக்கர்’.

 

அறிமுக நாயகன் விக்னேஷ் பக்கத்து வீட்டு பையன் போல் எளிமையாக இருப்பதோடு, கதாபாத்திரத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறார். நாயகனாக நடிப்பது முதல் படம் என்றாலும் எந்த இடத்திலும் தடுமாற்றம் இன்றி தெளிவாக நடித்திருப்பவர், அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் நிரஞ்சனா அசோகன், அழகாக இருக்கிறார். நடிப்பிலும் குறையில்லை. கதாபாத்திரத்தை புரிந்துக்கொண்டு நடித்திருப்பவர், முதல் படத்திலேயே கதையில் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை கனகச்சிதமாக கையாண்டு பாராட்டு பெறுகிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் நிவாஸின் வில்லத்தனம் மிரட்டலாக இருப்பதோடு, திரைக்கதைக்கும் பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. மற்றொரு வில்லனாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

 

கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் தாஜ்பாபு மற்றும் பிரகாஷ் இருவரும் எளிமையான உடல் மொழி மற்றும் வசனங்கள் மூலமாக சிரிக்க வைக்கிறார்கள். படம் முழுவதும் வரும் இவர்களுக்கு சற்று கூடுதல் காட்சிகளை ஒதுக்கியிருந்தால் சிரிப்பு சத்தத்தால் திரையரங்கமே அதிர்ந்திருக்கும்.

 

தணிகை தாசனனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமான படங்களுக்கு நிகராகவும், தரமாகவும் உள்ளது. சிறு முதலீட்டு படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு தனது கேமரா கோணங்கள் மூலம் அனைத்து காட்சிகளையும் கலர்புல்லாகவும், பவர்புல்லாகவும் படமாக்கியிருக்கிறார்.

 

வைகுந்த் ஸ்ரீனிவாசனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். திரில்லர் மற்றும் விறுவிறுப்பாக நகரும் காட்சிகளில் பின்னணி இசையை முன்னிலைப்படுத்துவதற்காக அதிகம் சத்தமான ஒலிகளை நிரப்பி காட்சிகளை சிதைக்காமல் அளவான இசை மூலம் காட்சிகளின் சூழலை ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார்.

 

திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ராஜசேகர்.என் மற்றும் யுவராஜ் கண்னன், சிறிய முதலீட்டு படத்தை பிரமாண்ட திரைப்படமாக காட்டுவதற்கு அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். முதல் பாதியில் நாயகன் மற்றவர்களிடம் மோசடியில் ஈடுபடுவது மற்றும் திருட்டு வேலைகளில் ஈடுபடும் காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்பவர்கள், இரண்டாம் பாதியில் அதே திருட்டு சம்பவம் மூலம் வேறு ஒரு உலகத்திற்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்கள். அங்கு என்ன நடக்கும்? என்பதை நம்மால் யூகிக்க முடிந்தாலும், அந்த காட்சிகளில் இருக்கும் விறுவிறுப்பு நம்மை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.

 

நாயகனின் மோசடி மற்றும் காதல் என்று முதல் பாதியில் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கதை விவரிக்கும் இயக்குநர்கள், இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகத்தை அதிகரித்திருப்பதோடு, எந்த இடத்திலும் தடுமாறாமல் க்ளைமாக்ஸ் வரை பரபரப்பை கொண்டு செல்கிறார். இறுதியில் வைக்கப்பட்ட  திருப்புமுனை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமாக சொல்ல வேண்டிய ஒரு கதையை, தங்களுக்கு கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர்கள் ராஜசேகர்.என் மற்றும் யுவராஜ் கண்னன் இருவரையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், சில இடங்களில் லாஜிக் மீறல்களும் இருக்கத்தான் செய்கிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்.

 

பெரிய ஹீரோக்கள் மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டிய ஒரு கதையாக இருந்தாலும், அதை அறிமுக நட்சத்திரங்கள் மூலம் மிக நேர்த்தியாக இயக்கியிருக்கும் இயக்குநர் ராஜசேகர்.என் மற்றும் யுவராஜ் கண்னன் இருவருக்கும் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இடம் நிச்சயம் உண்டு.

 

மொத்தத்தில், இந்த ‘லாக்கர்’ ரசிகர்களை இரண்டு மணி நேரம் திரையரங்கில் வைத்து லாக் செய்யும்.

 

ரேட்டிங் 3.3/5