Apr 24, 2019 12:13 PM

அரசியல் பேசியதால் ‘களவாணி 2’ படத்திற்கு வந்த ஆபத்து!

அரசியல் பேசியதால் ‘களவாணி 2’ படத்திற்கு வந்த ஆபத்து!

கடந்த 2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில், விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘களவாணி’. 9 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘களவாணி 2’ என்ற தலைப்பில் சற்குணம் இயக்கியுள்ளார். விமல், ஓவியா நடித்திருக்கும் இப்படத்தை களவாணியை விடவும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

 

மேலும், களவாணி முதல் பாகம் முழுக்க முழுக்க காதலையும், எதார்த்தமான கிராமத்து இளைஞரின் வாழ்க்கையையும் பேசிய நிலையில், ‘களவாணி 2’ படம் தற்போதைய அரசியல் மற்றும் தேர்தல் பற்றி விரிவாகவும், விமர்சனம் செய்யும் விதத்திலும் பேசியிருக்கிறது.

 

இதில் விமல், ஓவியா ஆகியோரை தவிர, பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும், அவரது பர்பாமன்ஸும் பெரிதும் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

 

Public Star Durai Sudhakar

 

இந்த நிலையில், ‘களவாணி 2’ படத்தை வெளியிட நீதிமன்றம் 6 வாரங்களுக்கு தடை விதித்திருக்கிறது. இந்த தடையை விநியோகஸ்தர் ஒருவர் பெற்றிருந்தாலும், இதற்கு பின்னணியில் அரசியல் இருக்குமோ என்று படக்குழுவினர் கருதுகிறார்கள்.

 

அதாவது, ‘மெர்சல்’ படத்தில் விஜய் எப்படி ஜி.எஸ்.டி பற்றி பேசி மத்திய அரசை கலங்கடித்தாரோ அதுபோல், ‘களவாணி 2’ வில் உள்ளாட்சி தேர்தல் குறித்து காரசாரமாக பேசியிருப்பது மட்டும் இன்றி கடுமையாக விமர்சனம் செய்திருப்பதாகவும் கூறப்படுவதோடு, டிரைலரிலும் அத்தகைய சாயலே தெரிகிறது. இப்படி அரசியலை வெளுத்து வாங்கியிருப்பதாலேயே ‘களவாணி 2’ படத்தை வெளியிடாமல் செய்ய, சில அரசியல் கட்சிகள் சதி செய்வதாக சந்தேகம் எழுந்துள்ளது.

 

தற்போது, ‘களவாணி 2’ படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பவர், ஏற்கனவே பல பெரிய நடிகர்களின் படங்களிலும் இதுபோல பிரச்சினை செய்வர் என்பது ஒரு பக்கம் இருக்க, அவர் விளம்பரத்திற்காகவே இப்படி செய்திருக்கலாம் என்று சிலர் கூறினாலும், அரசியல் நோக்கத்திற்காகவே ‘களவாணி 2’ படத்திற்கு பிரச்சினை கொடுக்க செய்கிறார்களோ, என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.