Jan 14, 2020 03:09 AM

கேபிள் டிவியில் ஒளிபரப்பான ‘தர்பார்’! - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

கேபிள் டிவியில் ஒளிபரப்பான ‘தர்பார்’! - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

பல கோடிகள் முதலீடு செய்தாலும், அவற்றை திரும்ப பெறுவதற்கான உத்திரவாதம் இல்லாத தொழிலாக சினிமா தொழில் உள்ளது. இதற்கு காரணம், பைரஸி என்ற திருட்டு விசிடி, உரிய அனுமதி பெறாமல் இணயதளங்களில் புதுப்படங்கள் வெளியாவது என்பது தான். அதிலும், இதுபோன்ற கண்ணுக்கு தெரியாத மர்ம ஆசாமிகள் ஒருபக்கம் இருக்க, தெரிந்தே இதுபோன்ற தவறை சில கேபிள் டிவி-க்கள் செய்வது தான் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்ட்டத்தையும், துயரத்தையும் கொடுக்கிறது.

 

அப்படி ஒரு துயரத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தர்பார்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அனுபவித்து வருகிறது.

 

மிகபிரம்மாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் ‘தர்பார்’ படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், இணையம், வாட்ஸ்-அப் என்று பைரஸியால் அப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டதோடு, மதுரையில் கேபிள் டிவியில் ’தர்பார்’ படத்தை சில விசமிகள் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

 

மதுரை அருகில் இயங்கும் சரண்யா கேபிள் டிவி நெட் ஒர்க் நிறுவனம் சட்ட விரோதமாக கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ‘தர்பார்’ படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பியுள்ளது.

 

இதனால், லைகா நிறுவனமும், மதுரை விநியோகஸ்தரும் பெரும் இழப்பை சந்தித்திருப்பதோடு, தமிழ் சினிமாவின் வளர்ச்சியை சீரழிப்பதாகவும் உள்ளது.

 

சட்டவிரோதமான இந்த ஒளிபரப்பை லைக்கா நிறுவனம் கண்டிப்பதுடன் காவல் துறை ஆணையரிடம் இது குறித்து கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு கோரியுள்ளது.

 

மேலும், ‘தர்பார்’ படத்தை மதுரை மற்றும் ராம்நாடு பகுதிகளில் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கும் சி.எல்.என் சினிமாஸ் நிறுவனமும் இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளித்திருக்கிறது.

 

சினிமா தொழிலின் வளர்ச்சியை தொடர்ந்த் தடுத்து வரும் பைரஸியை ஒழிக்க, சினிமா துறையும் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், சரண்யா கேபிள் டிவி போன்றவர்களின் கண்ணுக்கு தெரிந்த இதுபோன்ற திருட்டுத்தனத்தால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், இதுபோல் உரிய அனுமதி இல்லாமல் புதிய திரைப்படங்களை கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பு செய்பவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

‘தர்பார்’ படத்தை கேபிள் டிவியில் ஒளிபரப்பிய சரண்யா கேபிள் டிவி நிறுவனம் மீது அப்படி ஒரு கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுக்குமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.a