Apr 07, 2020 06:57 AM

சினிமா முக்கியம் அல்ல! - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்

சினிமா முக்கியம் அல்ல! - தியேட்டர் உரிமையாளர் ஓபன் டாக்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் பல்லாயிரம் மக்களின் உயிர் பலியாகியுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தாக்கல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அமலில் இருக்கும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு, மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், இந்தியாவின் சில பகுதிகளில் உணவு இன்றி பசியால் சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

 

பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருப்பது போல சினிமா துறையும் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நிலையில், தற்போதைய சூழலில் சினிமா முக்கியம் அல்ல, என்று பிரபல திரையரங்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

 

சென்னை, குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷ் கெளதம், போன் மூலம் இணையதள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ”பிரதமர் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பாகவே தியேட்டர்களை மூடிவிட்டோம். காரணம், கொரோனாவின் பாதிப்பு உலக நாடுகளில் எப்படி இருக்கிறது, இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் அறிந்திருந்திருந்ததால் தான்.

 

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் சினிமா துறை பாதிக்கப்பட்டிருக்கிறது, என்று நாங்கள் கவலைப்படவில்லை. காரணம், அனைத்து துறையும் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழலில் எங்கள் தொழில் பாதிப்படைந்திருக்கிறது, என்று கவலைப்படுவதை விட, மக்களை காப்பாற்ற வேண்டுமே, என்ற கவலை தான் இருக்கிறது. அதனால், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்த பிறகு கூட திரையரங்கை திறக்காமல் இருப்பது தான் நல்லது. முழுவதுமாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பிறகே, தியேட்டர்களை திறக்க வேண்டும், அப்போது தான் மக்களு பாதுகாப்பாக இருக்கும். தற்போதைய சூழலில் சினிமா என்பது தேவையில்லாத ஒன்று தான்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Rakesh Goutham

 

மேலும், கோரோனா பிரச்சினை ஏப்ரல் மாதம் இறுதியில் முடிவுக்கு வந்தாலும், பெரிய நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகாது. அப்படியே ரிலீஸ் ஆனாலும், மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு பயப்படுவார்கள், என்றும் ராகேஷ் கூறியுள்ளார்.