Nov 30, 2020 11:24 AM

அரசியலுக்கு முழுக்கா? - தொடரும் ரஜினியின் சஸ்பென்ஸ்

அரசியலுக்கு முழுக்கா? - தொடரும் ரஜினியின் சஸ்பென்ஸ்

ரஜினிகாந்த் அரசியலில் களம் இறங்கப் போவதாக அறிவித்து சுமார் 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றும் அவர் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்று அறிவித்தவர், அந்த அறிவிப்புக்கு பிறகு மவுனமாக இருந்த நிலையில், திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை தான் முக்கியம் என்று அறிவித்தார்.

 

ரஜினிகாந்தின் இந்த முரன்பட்ட கருத்தால் அவர் அரசியலுக்கு வர மாட்டார், என்று கூறப்பட்டது. அதே சமயம், அவர் அரசியலுக்கு வருவார், என்று நம்பியிருக்கும் ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார், என்று ஒரு தரப்பு ரசிகர்கள் கருத்து கூறி வந்தார்கள்.

 

இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த், இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால், அவர் தனது அரசியல் அறிவிப்பை இன்று வெளியிடுவார், என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதேபோல், தற்போது அரசியல் தேவையில்லை, என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட உள்ளார், என்ற தகவலும் வெளியானது.

 

தற்போதைய அரசியல் நிலவரம் குறித்த கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்ட ரஜினிகாந்த், நிருபர்களிடம் பேசுகையில், ”விரைவில் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பேன். என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.

 

ரஜினிகாந்தின் இந்த கருத்தால் அவர் அரசியலுக்கு “வருவாரா மாட்டாரா...” என்ற குழப்பம் மக்களிடமும், அவரது ரசிகர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது. அவரின் இத்தகைய சஸ்பென்ஸான பேச்சால், அவர் அரசியலுக்கு வராமலலேயே முழுக்கு போட்டுவிட்டார், அதனை விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார், என்றும் பேச்சு அடிபடுகிறது.

 

ஆனால், ரஜினிகாந்தின் ரசிகர்கள், இத்தகைய குழப்ப நிலையிலும், அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார், என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.