சீரியல் நடிகர் ஸ்ரீ தேவா நாயகனாக நடிக்கும் ‘வசூல் மன்னன்’!

முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார். இவர் சீரியல் மட்டும் இன்றி சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ‘வசூல் மன்னன்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.
எம்.எல்.புரொடக்சன்ஸ் சார்பில் ஆறுமுகம் மாதப்பன் தயாரிக்கும் இப்படத்தை ‘கன்னக்கோல்’ திரைப்படம் மூலம் சமூக பிரச்சனைகளை நகைச்சுவையாக பேசி கவனம் ஈர்த்த இயக்குநர் வேல் குமரேசன், தனது இரண்டாவத் படமாக இயக்குகிறார். இப்படமும் முழுக்க முழுக்கை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகினாலும், அதன் பின்னணியில் மிக முக்கியமான விசயம் குறித்து இயக்குநர் பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீ தேவா நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக நிவேதா நடித்திருக்கிறார். இவர்களுடன் வேல ராமமூர்த்தி, இமான் அண்ணாச்சி, சரவண சுப்பையா, குட்டிப்புலி சரவண சக்தி, ரிந்து ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பரணி இசையமைத்து, ஒரு பாடலையும் எழுதி உள்ளார். இன்னொரு பாடலை நா.ப. சுப்ரமணியம் எழுதி உள்ளார். சிவகுமார் ஒளிப்பதிவையும், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பையும், ராதிகா நடன பயிற்சியையும், சரவணன் கலையையும், கவனித்துள்ளனர். ஈஸ்வர் தயாரிப்பு நிர்வாகத்தையும், ஜவஹர் மாரிமுத்து தயாரிப்பு மேற்பார்வையையும் கவனித்துள்ளனர்.
இப்படம் பற்றி இயக்குநர் வேல் குமரேசன் கூறுகையில், “ஒருவன் தன் வாழ்நாளில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம், தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடவே கூடாது என்பதை இப்படத்தின் மையக் கருவாக வைத்து, அதை நகைச்சுவையுடன் உருவாக்கி உள்ளேன்.” என்றார்.
இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் ‘வசூல் மன்னன்’ படத்தின் முதல் பார்வை, டீசர், டிரைலர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், படம் பற்றி மேலும் பல தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.