May 11, 2025 04:27 PM

அன்பை அப்படியே திருப்பிக் கொடுக்கும் சூர்யா! - விநியோகஸ்தர் சக்திவேலன் நெகிழ்ச்சி

அன்பை அப்படியே திருப்பிக் கொடுக்கும் சூர்யா! - விநியோகஸ்தர் சக்திவேலன் நெகிழ்ச்சி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், டி2 எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்களின் தயாரிப்பில், கடந்த வாரம் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சமீபத்தில் படக்குழுவினருடன் பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட ‘ரெட்ரோ’ படக்குழுவினர் ரசிகர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

 

மேலும், தமிழகம் முழுவதும் ‘ரெட்ரோ’ படத்தை திரையரங்குகளில் விநியோகம் செய்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் பி.சக்திவேலன், நாயகன் சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வைர மோதிரம் பரிசாக வழங்கினார்.  ஆனால், நடிகர் சூர்யா மட்டும், சக்திவேலன் அணிவித்த வைர மோதிரத்தை அவருக்கே திருப்பி அணிவித்து அழகுப் பார்த்தார்.

 

நடிகர் சூர்யாவின் இந்த செயல் புதிதல்ல, ஒவ்வொரு முறையும் விநியோகஸ்தர் சக்திவேலன், அவருக்கு பரிசளிக்க, அதை அப்படியே சக்திவேலனுக்கு திருப்பிக் கொடுப்பது சூர்யாவின் வாடிக்கை. எனவே, தன்னிடம் அன்பு செலுத்துபவர்களிடம், அந்த அன்பை அப்படியே திருப்பிக் கொடுக்கும் நடிகர் சூர்யாவின் இந்த செயலால், விநியோகஸ்தர் சக்திவேலன் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

 

Sakthivelan and Surya

 

இது குறித்து சக்திவேலன் கூறுகையில், “ரெட்ரோ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட வாய்ப்பளித்த 2D நிறுவனத்திற்கும், சூர்யா அண்ணன் மற்றும் ராஜசேகர பாண்டியன் அண்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மேலும் இத்திரைப்படம், இவ்வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக இலாபம் தந்த திரைப்படமாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.  இத்திரைப்படம் உருவாக காரணமான தயாரிப்பாளர்கள் மற்றும் முக்கிய கலைஞர்களான இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசியர், ஒளிப்பதிவாளர் போன்றவர்களுக்கு வைர மோதிரங்களை பரிசாக வழங்கினோம். சூர்யா அண்ணாவிற்கு மோதிரம் வழங்கிய போது அதனை உடனடியாக மீண்டும் எனக்கே திரும்ப அணிவித்து, தன் அன்பையும் ஆதரவையும் பகிர்ந்து கொண்டார், அது என் வாழ்வில் மற்றொரு நெகிழ்வான தருணமாக மாறியது. இந்நெகிழ்ச்சி எனக்கு முதல் முறையல்ல, முன்பு 'கடைகுட்டி சிங்கம்' வெற்றி விழாவில் தங்க செயின் மற்றும் 'விருமன்' வெற்றி விழாவில் வைர பிரேஸ்லெட் பரிசாக வழங்கும் போதும் சூர்யா அண்ணா எனக்கே அதை திரும்ப அணிவித்தார்.” என்றார்.