Jul 19, 2017 10:48 AM

'சிறந்த சமூக விழிப்புணர்வு படம்' என்ற விருது பெற்ற 'மரணம் நிச்சயம்'!

'சிறந்த சமூக விழிப்புணர்வு படம்' என்ற விருது பெற்ற 'மரணம் நிச்சயம்'!

மேட்மேன் ஸ்டுடியோஸ் சார்பாக  'மரணம் நிச்சயம்' எனும் புகையின் தீமையை உணர்த்தும்  சமூக விழிப்புணர்வு படத்தை தயாரித்து இயக்கி இருப்பவர் யோகி பிரம்மன். இந்த படத்தின் திரையிடல் சில நாட்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்றது. திரையிடலுக்கு சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்.பொன்ராஜ், திருக்குறள் ஆய்வாளர் B.R.கார்த்திக் மற்றும்  நடிகர் அபி  சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் இயக்குநர் யோகி பிரம்மன் பேசியதாவது, “முதலில் இப்படத்தின் திரையிடலுக்கு தியேட்டர் தந்து உதவிய  தியேட்டர் உரிமையாளர் உயர்திரு.ரவி அவர்களுக்கு நன்றி.  திரையிடலுக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைத்த பொழுது  பண்புள்ளம் கொண்ட ஐயா டாக்டர்.பொன்ராஜ் அவர்கள், திருக்குறள் ஆய்வாளர் உயர்திரு.B.R.கார்த்திக் அவர்கள் மற்றும் நடிகர்,சமூக ஆர்வலர் திரு.அபி சரவணன் ஆகியவர்களும்  கொடுத்த  ஒத்துழைப்பும் உற்சாகமும் இப்படத்தை மக்களிடம் சரியான முறையில் எடுத்துச் செல்ல உதவியது. வளரும் இளைஞர்களின் மேல் இவர்கள் காட்டிய அக்கறை சொல் அல்ல செயல் என்பது வெளிச்சம். இவர்களுக்கும்  இப்படம் உருவாகக் காரணமாய் இருந்த அனைவருக்கும்  என் மனமார்ந்த நன்றி.

 

சமீபத்தில் புகையின் தீமையை உணர்த்தும்  எனது 'மரணம் நிச்சயம்' படத்திற்கு மதுரை ரோட்டரி கிளப் வழங்கிய 'சிறந்த சமூக விழிப்புணர்வு படம்' என்ற விருது மேட்மேன் ஸ்டுடியோஸ் சார்பாக இப்படத்தை தயாரித்து இயக்கிய எனக்கு அடுத்த அடிக்கான தையிரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்துள்ளது. இதற்கு  முன்பே மூன்று குறும்படங்கள் செய்திருந்தாலும் மக்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்ட என் முதல் படைப்பு  'மரணம் நிச்சயம்'. இதனை எந்த ஒரு சூழலிலும் நான் குறும்படமாக கருதியதில்லை. ஒரு  படத்திற்கு என்ன அம்சங்கள் தேவையோ, என்ன உழைப்பு தேவையோ அத்தனையும் இக்குறும்படத்திற்கு  கொடுத்துள்ளோம். கடந்த ஒன்றே முக்கால் வருடமாக வேறு எந்த சிந்தனைகளும் இன்றி இப்படத்தை பல போராட்டங்களுக்கு இடையில் எடுத்துள்ளோம். இரண்டு மணி  நேர படத்தைப் போலவே இந்த 28 நிமிட  குறும்படமும்  உங்களை ஆட்கொள்ளும். இது ஒரு பொழுது போக்கு படமாக திரில்லர் கதையாக எடுக்கப்பட்டிருந்தாலும் உங்கள் பொழுதை வீணாக போக்கும் படம் அல்ல.

 

சமூகத்தின் பிரதிபலிப்பாக சினிமா விளங்குவதாலேயே மக்களிடத்தில்  அதற்கு எப்பொழுதும்  பெரிய வரவேற்பு உள்ளது. இன்றளவில் குறும்படங்கள் என்பது சாமானியனின் சினிமா கனவை நினைவாக்கும் எளிமையான அதே சமயம்  சக்தி மிகுந்த உளியாக  உள்ளது. அதனைப் பயன்படுத்தி நம் திறமையை வெளிகொண்டு வருவதோடு மக்களுக்கு பயன்படும் வகையில்  பல நல்ல கருத்துக்களையும் பதிவு செய்ய வேண்டியது ஒரு பொறுப்புள்ள கலைஞனின் கடமை.

 

'மரணம் நிச்சயம்' படத்தின் மூலம் நடிகர்கள் கார்த்திக்தமிழரசன், அசோக்ராஜ் மற்றும் இசையமைப்பாளர் R.K.தனுஷ் போன்ற  புது திறமைசாலிகளை வெளிக்கொண்டு வர முடிந்தது. அதோடு அல்லாமல் இப்படத்தின் மூலம்  ஒரு நல்ல கருத்தை ஆணித்தரமாக  சமூகத்தில் பதிவு செய்ய முடிந்ததும் மகிழ்ச்சி அளிக்கிறது.” என்றார்.