Sep 01, 2017 08:15 AM

மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவித்தது பெப்சி - படப்பிடிப்புகள் பாதிப்பு!

மீண்டும் வேலை நிறுத்தத்தை அறிவித்தது பெப்சி - படப்பிடிப்புகள் பாதிப்பு!

தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) கடந்த மாதம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பல்வேறு படங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்ட நிலையில், இன்று (செப்.1) முதல் மீண்டும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

 

தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்ஸிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பெப்ஸி கடந்த மாதம் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதனால் பல படங்களில் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் தலையிட்டதால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

 

இந்த நிலையில், நேற்று மாலை நடைபெற்ற பெப்சி பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பெப்சி ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.

 

இது குறித்து மேலும் பேசிய அவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய நடவடிக்கை பெப்சியை அழிப்பதாக உள்ளது. பெப்சி ஊழியர்கள் அல்லாத பிற ஊழியர்களை வேலைகு சேர்க்க விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். இருக்கிறவர்களுக்கே வேலை இல்லாதபோது, புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். பெப்சிக்கு எதிராக இன்னொரு அமைப்பை உருவாக்குவது வேதனை அளிக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து பெப்சி தொழிலாளர்கள் இன்று (வெள்ளிக் கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்து இருக்கிறோம்.

 

உள்ளுர் படப்பிடிப்புகளும், வெளியூர் படப்பிடிப்புகளும் நடைபெறாது. திரைப்பட தொழில்நுட்ப பணிகளும் நிறுத்தப்படும். வேலைக்கு புதிதாக ஆட்கள் எடுக்கும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறும் வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும்.

 

முதல்வரையும், தொழிலாளர் நலத்துறை அமைச்சரையும் சந்தித்து இந்த பிரச்சினை குறித்து பேச இருக்கிறோம். வருகிற 5 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். நடிகர் ரஜினிகாந்த் வேலை நிறுத்தம் வேண்டாம் என்று எங்களிடம் கேட்டுக்கொண்டு இருந்தார். வேலை நிறுத்தத்தை தவிர, வேறு எங்களுக்கு வழி இல்லை. இதற்காக அவரிடமும் மற்ற புதிய தயாரிப்பாளர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது பெப்சி தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டம்.” என்று தெரிவித்தார்.