’சல்லியர்கள்’ திரைப்பட விமர்சனம்
Casting : Sathyadevi, S.Karunaas, Thirumurugan, Janaki, Mahendran, Nagaraj, Priya, Anand Sounderarajan, Mohan, Santhosh
Directed By : T.Kittu
Music By : Ken & Eshwar
Produced By : Indian Cineway - S.Karunaas, P.Karikalan
தமிழ் ஈழ மக்களும், விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம், அவற்றை பல்வேறு படங்கள் பல வழிகளில் உலகக்கு எடுத்துரைக்க முயற்சித்திருக்கிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி இயங்கியது, அவர்களது பதுங்கு குழி மருத்துவமனை மற்றும் உயிரை துச்சமாக நினைத்து அதில் பணியாற்றிய மருத்துவர்களின் மனிதத்தன்மையும், சிக்கள ராணுவத்தின் மிருகத்தன்மையையும் விவரிக்கும் படைப்பு தான் ‘சல்லியர்கள்’.
சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிடும் புலிகள் அமைப்பினர் காயமடைந்தால், அவர்களை காப்பாற்றுவதற்காக போர்க்களத்தில் பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி, சரியான உணவு, உறக்கம் இன்றி, பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.
இதற்கிடையே, புலிகள் அமைப்புகளின் மருத்துவ குழுவை அழித்தால், அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் போடும் சிங்கள ராணுவம், போராளிகளின் மருத்துவ பணிகளுக்கு எதிராக செயல்பட தொடங்குகிறது. அதே சமயம், தமிழ் ஈழ மருத்துவர்கள், போராளிகளாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, உயிருக்காக போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக தங்களது உயிரையும் பணயம் வைத்து பணிபுரிகிறார்கள். அத்தகைய மருத்துவர்களின் சேவையையும், வீரத்தையும் திரை மொழியில் மிக சுவாரஸ்யமாக விவரிக்கிறது இந்த ‘சல்லியர்கள்’.
மருத்துவர்நந்தினி கதாபாத்திரத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் சத்யதேவி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அளவான உரையாடல், தெளிவான முடிவு, விவேகமான செயல்பாடு என்று தமிழ் ஈழ போராளி மருத்துவர்களை நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். பதுங்கு குழியில் பணியாற்றும் அவரது உடல் மொழி, தோற்றம் என அனைத்தும் அவரை ஒரு நடிகையாக அல்லாமல் ஒரு மருத்துவ போராளியாகவே பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்து விடுகிறது.
மருத்துவர் செம்பியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மகேந்திரன், தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். நடிகர் மகேந்திரன் என்ற அடையாளம் எந்த இடத்திலும் தெரியாதது, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
நாயகியின் தந்தையாக மதிழயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சேது கருணாஸ், பேசும் வசனங்கள் அனைத்தும், தமிழ் ஈழ மக்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்துகிறது.
சிங்கள ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் திருமுருகன், சந்தோஷ், மோகன் அனைவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.
காதலர்களாக அறிமுகமாகி பிறகு போராளிகளாக பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் நாகராஜ் - பிரியலயா ஜோடி.
கென் மற்றும் ஈஸ்வர் ஆகியோரது இசையில், வைரமுத்து மற்றும் டி.கிட்டு ஆகியோரது வரிகளில் பாடல்கள் திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னும் மனதை விட்டு நீங்க மறுக்கின்றன. பின்னணி இசை கதைக்களத்திற்கும், காட்சிகளுக்கும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக இருக்கிறது. குறிப்பாக யுத்த காட்சிகளை படமாக்கிய விதம் வியக்க வைக்கிறது. படத்தில் இடம் பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் தமிழ் ஈழத்தில் பயணித்த அனுபவத்தை கொடுக்கிறது.
படத்தொகுப்பாளர் சி.எம்.இளங்கோவன், யுத்தத்தின் நடுவே உயிர்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்களின் மனநிலையையும், அவர்களது சூழலையும், சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் விதத்தில் தொகுத்திருக்கிறார்.
கலை இயக்குநர் முஜுபீர் ரஹ்மானின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ள பதுங்கு குழி மருத்துவனை உள்ளிட்ட படத்தில் இடம் பெறும் சிறு சிறு விசயங்களில் கூட பல நுணுக்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஒப்பனை கலைஞர் அப்துல் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பூங்குழில் கிட்டு ஆகியோரது பணி கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் உண்மைக்கு நெருக்கத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் டி.கிட்டு, தமிழ் ஈழ விடுதலை போராளிகள் பற்றி இதுவரை சொல்லப்படாத விசயங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருப்பதோடு, இனப் பாகுபாடின்றி உயிரைக் காப்பாற்றும் உயரிய நோக்குடன் செயல்படும் தமிழ் ஈழ போராளி மருத்துவர்களின் வாழ்வியலை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
போராளிகளுக்கு உயிரைவிட பிறந்த மண்ணே உன்னதமானது, என்பதை வசனங்கள் மூலமாக மட்டும் இன்றி காட்சிகள் மூலமாகவும் சொல்லியிருக்கும் இயக்குநர் டி.கிட்டு, “நாம் நம் உயிரை விதையாக விதைக்கிறோம். ஒரு நாள் அது வெடித்து சுதந்திரமாக நிற்கும்” உள்ளிட்ட பல கூர்மையான மற்றும் உணர்வுப்பூர்வமான வசனங்கள் மூலம் பார்வையாளர்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்.
மொத்தத்தில், ‘சல்லியர்கள்’ தமிழர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய வரலாறு.
ரேட்டிங் 4/5

