Oct 09, 2019 04:28 AM

’மெட்ராஸ்’ படத்தை விட ‘கைதி’ கதாபாத்திரம் தான் எனக்கு பிடித்தது! - கார்த்தி

’மெட்ராஸ்’ படத்தை விட ‘கைதி’ கதாபாத்திரம் தான் எனக்கு பிடித்தது! - கார்த்தி

’மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது விஜயின் 64 வது படத்தை இயக்கி வருகிறார். இது அவருக்கு மூன்றாவது படமாகும். அவரது இரண்டாவது படமான ‘கைதி’ தீபாவளிக்கு வெளியாகிறது. கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தின் கதை ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களாகும்.

 

ஹீரோயின் இல்லாத இப்படத்தில் நரேன், ரமணா, விஜய் டிவி தினா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

10 வருடங்கள் ஒருவர் சிறையில் இருந்துவிட்டு வெளியில் வந்தால், அவரது மன நிலை எப்படி இருக்கும், என்பது குறித்து பேசும் இப்படம் முழுவதுமே இரவில் படமாக்கப்பட்டிருப்பதோடு, படம் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்திருக்குமாம்.

 

தீபாவளிக்கு எத்தனை பெரிய படங்கள் வந்தாலும், எங்களது படம் தாக்குப் பிடிக்கும் அந்த அளவுக்கு படத்தின் கண்டெண்ட் இருப்பதாக சொல்லாமல் சொல்லியிருக்கும் ‘கைதி’ படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

 

இதில் பேசிய கார்த்தி, “வித்தியாசமான கதைகளை எழுதும் இயக்குநர்களுக்கு எப்போதும் நான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். இப்படி தான் சுவரை வைத்து மெட்ராஸ் கதை எழுதப்பட்டிருந்தது. அதைப்படித்த போது ஒரு சுவரை வைத்து கதை எழுத முடியுமா? என்று தோன்றியது. ஆனால், அதில் இருந்த அரசியல் எனக்கு தெரியவில்லை. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் அப்படி தான். அந்த வகையில், ‘கைதி’ யும் அப்படி ஒரு வித்தியாசமான படம் தான்.

 

‘மெட்ராஸ்’ படம் கதையாக எனக்கு பிடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரம் மீது எனக்கு பெரிய விருப்பம் இல்லை. ஆனால், ‘கைதி’ படத்தின் கதாபாத்திரம் எனக்கு பிடித்த கதாபாத்திரம். ஒரு லாரி டிரைவர். சிறையில் 10 வருடங்கள் இருந்துவிட்டு வெளியே வரும் போது அவரது மன நிலை எப்படி இருக்கும். இதற்காக பல வருடங்கள் சிறையில் இருந்து வெளியே வந்தவர்களிடம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார். கலர் டிரெஸ் போட்டுட்டு போனாலே அவர்களுக்கு வித்தியாசமாக இருக்குமாம். நாயை கூட வெறித்து பார்த்துக் கொண்டிருப்பார்களாம். காரணம், எந்தவித வெளியுலக தொடர்போ, வேறு எதையும் பார்க்காமல், வெறும் சுவரை மட்டுமே பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் வெளியில் வரும் போது அனைத்துமே புதுஷாகவே இருக்கும் என்று கூறினார்கள். ரொம்ப நாளாகவே லாரி ஓட்ட வேண்டும் என்று ஆசை. அது இந்த படத்தில் நிறைவேறியது. அப்போது லாரி ஓட்டுநர்களின் கஷ்ட்டம் புரிந்தது.

 

Kaithi Press Meet

 

இந்த படம் ரொம்பவே வித்தியாசமான படம். படம் நன்றாக வர வேண்டும், அதற்காக தொழில்நுட்ப ரீதியாக என்னவேண்டுமானாலும் செய்ய சொன்னேன், எனக்கே கூட லைட்டிங் வேண்டாம் என்று கூட சொன்னேன். முழுக்க முழுக்க இரவில் மட்டுமே படமாக்கப்பட்ட படம். ஆக்‌ஷன் படங்கள் என்றாலே எனக்கு பிடிக்கும். இந்த படம் முழுவதுமே ஆக்‌ஷன் இருக்கிறது. இந்த படத்தில் நான் ஹீரோ என்பதைவிட ஒரு கதாபாத்திரம் என்று தான் சொல்வேன். நரேன், தினா என்று பலர் மீது இந்த கதை பயணிக்கும். அத்தனை நடிகர்களும் மனதில் நிற்கும் அளவுக்கு கதை அமைந்திருக்கிறது. நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அதே சமயம் ஸ்பெஷல் ட்ரீட்டாக இருக்கும்.” என்றார்.