Mar 13, 2026 05:31 AM

‘வெஞ்சென்ஸ்’ திரைப்பட விமர்சனம்

5a0e385dbdc738df127831c39a1af683.jpg

Casting : Abarnathi, Ilavarasu, JohnVijay, Livingston, Y. Gee. Mahendran, Kaali Venkat, Saravana subbiah, Suresh Chakravarthi

Directed By : Rahul Ashok

Music By : Karthik Raja

Produced By : Ac Productions - A.P. Ashok Kumar

 

சிறு வயதில் இருந்தே தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் அபர்ணதி, அதற்கான முயற்சியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த பாராட்டும், புகழ்ச்சியும் மூன்று நாட்களில் அடங்கிப் போனதால், தன்னைப் பற்றி தொடர்ந்து மற்றவர்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தில் தீவிரம் காட்டுபவர், அதற்காக சில அதிர்ச்சிகரமான சம்பவங்களை செய்கிறார். 

 

வளர்ந்து மாவட்ட ஆட்சியராகி, தன் பதவியின் மூலமும், தனது நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் பாராட்டுகளை பெறும் அபர்ணத்திக்கு,  முதலமைச்சர் மூலம் தடை ஏற்படுகிறது, அந்த தடையை தகர்த்தெறிவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் அபர்ணதி, ஒரு கட்டத்தில் முதலமைச்சரே தான் சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய இடத்திற்கு முன்னேறுகிறார். ஆனால், அவர் முன்னேற்றத்திற்கு இணையாக எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்கொள்ள, அதனை தனது புத்திசாலித்தனத்தால் எப்படி முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடிகிறார், என்பதை தமிழக பெண் அரசியல் தலைவரின் பிரதிபலிப்பாக சொல்வதே ‘வெஞ்சென்ஸ்’.

 

கதையின் நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி, தைரியமும், புத்திசாலித்தனமும் நிறைந்த பலம் வாய்ந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கூர்மையான பார்வை, தெளிவான பேச்சு, தைரியமான செயல் என தனது கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருப்பவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் விதமான பல காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இளவரசு, மத்திய அமைச்சராக நடித்திருக்கும் ஜான் விஜய், அபர்ணதியின் தந்தையாக நடித்திருக்கும் காளி வெங்கட், எதிர்க்கட்சி தலைவராக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன், முன்னாள் முதலமைச்சராக நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், அமைச்சராக நடித்திருக்கும் சரவண சுப்பையா ஆகியோரது கதாபாத்திரங்கள் தமிழக அரசியல் சம்பவங்களையும், அரசியல்வாதிகளையும் நினைவுப்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, பிரதமராக நடித்திருக்கும் மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள்  தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது. கதாநாயகியை அழகாக காட்டியிருப்பவர், அவர் மனதுக்குள் இருக்கும் உணர்வுகளை அவரது முகத்திலும் தெரிய வைத்திருக்கிறார்.

 

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையின் வேகத்திற்கு பலமாக பயணித்திருக்கிறது. 

 

இம்ரானின் படத்தொகுப்பு திரைக்கதையை தொய்வின்றி நகர்த்தியிருப்பதோடு, பல்வேறு அரசியல் நிகழ்வுகளை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது.

 

ஒரு பெண்ணின் பழிவாங்கும் எண்ணம் மற்றும் தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு, தமிழக அரசியல் சம்பவங்களை திரைக்கதையாக்கி படத்தை வேகாமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.

 

கதாநாயகியின் நடவடிக்கை, முன்னேற்றம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்கள் ஆகியவற்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவுப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராகுல் அசோக், வெளிவராத சில விசயங்களை கூட தைரியமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

மாநில அரசியல் முதல் மத்திய அரசியல் என இந்திய அரசியலையும், அதன் மூலம் வளர்ச்சியடையும் கார்ப்பரேட் முதலாளிகள், தேர்தல் சமயங்களில் பணியாற்றும் வியூகம் வகுப்பாளர்களின் நடவடிக்கை, கட்சிக்குள் இருக்கும் அதிகார மோதல்கள் என அனைத்தையும் விரிவாக அலசி ஒரு முழுமையான அரசியல் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.

 

படத்தின் முதல் பாதி எந்தவித தொய்வின்றி வேகமாக நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி நகரவில்லை. இரண்டாம் பாதியில் வரும் கதாநாயகியின் விஸ்வரூபம் மற்றும் அவருக்கான எதிர்ப்பு, அதை அவர் சமாளிக்கும் விதம் ஆகியவை அழுத்தம் இல்லாத காட்சிகளாக இருப்பதால், அவை திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், தமிழக அரசியல் சம்பவங்களையும், அரசியல்வாதிகளின் பின்னணியை இணைத்து திரைக்கதையை கையாண்ட விதம் படத்தை தொய்வில் இருந்து மீட்டெடுத்து விடுகிறது.

 

மொத்தத்தில், ‘வெஞ்சென்ஸ்’ அதிர வைக்கும் அரசியல் படம்.

 

ரேட்டிங் 3.2/5