’ரூம் பாய்’ திரைப்பட விமர்சனம்
Casting : C.Nikhil, Harsha, Imman Annachi, Birla Bose, Katrhu Karuppu kalai, Karpagam, Kavitha Vijayan, Sameer, Arun Raja, City Raja, Prabhakar
Directed By : Jegan Rayan
Music By : Velavan Sahadevan
Produced By : ACM Cinemas - Suriyakala Chandramurthy
கூர்நோக்கு மையத்தில் படித்து முடித்து வெளியேறும் நாயகன் நிகில், ஏலகிரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் ரூம் பாயாக வேலைக்கு சேருகிறார். அங்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட பல மோசடிகளை கண்டுபிடிக்கும் நிகில், அதற்கான ஆதாரங்களை கைப்பற்றுவதோடு விடுதியின் மேலாளரை கொடூரமாக கொலை செய்கிறார். இதனால், அவரை வில்லன் கும்பல் தேட, மறுபக்கம் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமான வழக்கு தொடர்பாக போலீஸும் நிகிலை தேடுகிறது.
இவர்களிடம் சிக்காமல் தப்பித்தாலும், அந்த சொகுசு விடுதியை சுற்றி சுற்றி வரும் நிகில் யார் ?, அவருக்கும் அந்த சொகுசு விடுதி மற்றும் கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமானதற்கும் இருக்கும் தொடர்பு என்ன ? என்பதை பல திருப்பங்களோடு சொல்வது தான் ‘ரூம் பாய்’.
அம்மா, அப்பா, தங்கை என்று மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருந்த நாயகன் அனைவரையும் இழந்த அனாதையாகிறார். தனது நிலைக்கு காரணமானவர்களை தேடி பழி தீர்க்க கிளம்பும் நாயகன் நிகிலின் பயணமாக கதை நகர்ந்தாலும், சில உண்மை சம்பவங்களை திரைக்கதையுடன் இணைத்து, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பாணியில் பரபரப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சி.நிகில், தனது துடிதுடிப்பான நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நடனம் மற்றும் ஆக்ஷன் இரண்டிலும் அசத்தியிருக்கும் நிகில், தனது வேலையை மிக சரியாக செய்து அறிமுகப்படுத்தியிலேயே பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹர்ஷாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் ஒரு பாடலுக்கு மட்டும் முகம் காட்டியிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் அருண்ராஜாவை விட, கூர்நோக்கு மையத்தின் காப்பாளராக நடித்திருக்கும் பிரபாகர் வில்லத்தனத்தை மிரட்டலாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர், சிட்டி ராஜா, கேரளா பெஹமின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இருந்தாலும், மனதில் நிற்கவில்லை.
வீட்டுக்குள் மற்றும் சொகுசு விடுதியின் அறைகள் அல்லது விடுதி வளாகம் என்று பெரும்பாலான காட்சிகள் உட்புறங்களில் நடப்பதால், அதற்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சி.பாரதி ராஜன், அதை கதைக்கு ஏற்ற காட்சிகளாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்.
வேலன் சகாதேவன் இசையில், சூரியமூர்த்தியின் வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம், குறிப்பாக ”பட்டர்பிளை கண்ணடிச்சி...” என்ற காதல் பாடலும், அப்பாவின் பெருமை பேசும் பாடலும் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
பிரமாண்டமான காட்சியமைப்புகள் இல்லை என்றாலும், திரைக்கதையில் இருக்கும் திருப்பங்களை, யூகிக்க முடியாதபடி தொகுத்து படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் டி.வி.மீனாட்சி சுந்தர்.
உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் பாணி படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் ஜெகன் ராயன், பட்ஜெட் கட்டுப்பாட்டில் பயணித்திருப்பது பிரமாண்டம் இல்லாத காட்சிகள் மூலம் தெரிந்தாலும், தான் சொல்ல வந்த கதையை மிக நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
கூர்நோக்கு மையத்தின் காப்பாளர் மாயமானது, சொகுசு விடுதியில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதனை வைத்து பணம் பறிக்கும் கோசடி கும்பல் ஆகியவற்றுடன் தவறு ஏதும் செய்யாத நாயகன் கூர்நோக்கு மையத்தில் இருப்பது, அவரது குடும்ப பின்னணி என்று பல அம்சங்களோடும், பல கதாபாத்திர வடிவமைப்புகளுடனும் திரைக்கதைக்கு விறுவிறுப்பை சேர்த்திருக்கும் இயக்குநர் ஜெகன் ராயன், அதை எந்தவித குழப்பமும் இன்றி நேர்த்தியாக விவரித்திருக்கிறார்.
பொருளாதார ரீதியிலான கட்டுப்பாடுகளால், பிரமாண்டம் இல்லாத காட்சிகள் பார்வையாளர்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை என்றாலும், ஒரு கிரைம் திரில்லர் கதையை மிக நியாயமான முறையில் சொல்லி பார்வையாளர்களிடம் பாரட்டு பெற்று விடுகிறார் இயக்குநர் ஜெகன் ராயன்.
மொத்தத்தில், ‘ரூம் பாய்’ பார்வையாளர்கள் கொடுக்கும் டிக்கெட் ரூபாய்க்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
ரேட்டிங் 2.8/5

