‘TN 2026’ திரைப்பட விமர்சனம்
Casting : Natty Natraj, Thambi Ramaiah, M. S. Bhaskar, Ilavarasu, Shrrita Rao, Chandini Tamilarasan, Yashika Anand Redin Kingsley
Directed By : Umapathy S. Ramaiah
Music By : Darbuka Siva
Produced By : Kannan Ravi Groups - Kannan Ravi
வட மாநிலத்தை சேர்ந்த நட்டி நட்ராஜ், சென்னைக்கு பிழைப்புக்காக வந்து எதிர்பாரதவிதமாக நடிகராகி விடுகிறார். அவரது முதல் படம் மக்களிடம் வரவேற்பு பெறுவதோடு, மக்கள் மனதில் அடுத்த எம்.ஜி.ஆர் என்ற இடத்தையும் பிடித்து விடுகிறார். எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ஜமீன்தார் தம்பி ராமையாவும், நட்டி எம்.ஜி.ஆர் இடத்தை பிடிப்பார் என்பதை கணிப்பதோடு, அவருக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து சினிமாவில் அவரை உச்ச நடிகராக்கும் பயணத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
சினிமாவில் உச்ச நடிகராக உயரும் நட்டியை அரசியல் பேச வைப்பதோடு, புதிய அரசியல் கட்சியையும் தொடங்க வைக்கும் தம்பி ராமையா, 2026 ஆம் ஆண்டு அவர் தான் தமிழகத்தின் முதல்வர், என்ற நம்பிக்கையையும் அவரது மனதில் பதிய வைத்து அரசியலில் பயணிக்க வைக்கும் நிலையில், நட்டி நட்ராஜ் எடுக்கும் திடீர் முடிவு அரசியல் உலகின் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அது என்ன ? என்பதை அரசியல் நையாண்டியாக மட்டும் இன்றி திரை நட்சத்திரங்களின் அரசியல் பயணத்தையும் நையாண்டி செய்யும் விதமாக சொல்வதே ‘TN 2026’.
எம்.ஜி.ஆரை தொடர்ந்து தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலர் அரசியல் களத்தில் பயணித்தாலும், சினிமாவில் அவர் இடத்தை பிடித்தது போல் அரசியலில் யாரும் பிடிக்கவில்லை, என்ற உண்மையை நகைச்சுவையாகவும், நையாண்டியுடனும் சொல்லியிருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா, வேற்று மாநிலத்தைச் சேர்ந்த உச்ச நடிகர் ஒருவரின் சினிமா பயணத்தின் மாபெரும் வெற்றி, காதல், திருமண உறவில் ஏற்பட்ட சிக்கல் ஆகியவற்றுடன் அவரது ஆரம்பிக்காத அரசியல் பயணத்தின் முடிவுயும் சேர்த்து திரைக்கதையாக்கியிருப்பதோடு, அதை தற்போதைய உச்ச நடிகரின் அரசியல் பயணம் மற்றும் அவரது உருவ தோற்றத்தின் பாதிப்போடு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் குல்கந்த் குமார் என்ற தங்க நட்சத்திரமாக திரையில் ஜொலிக்கிறார். பிழைப்பு தேடி தமிழ்நாட்டுக்கு வந்து, தமிழை தவறாக உச்சரிப்பதால் மக்கள் மனதில் ஒரு நடிகராக உச்சத்தை தொடும் அவரது நடிப்பு மற்றும் உடல்மொழி அனைத்தும் அவரது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறது.
ஜமீனாக இருந்தாலும், குல்கந்த் குமாரின் சேவகனாக, அரசியல் வழிகாட்டியாக பயணிக்கும் தம்பி ராமையாவின் தோற்றம் மற்றும் கெட்டப், உச்ச நடிகர் ஒருவரது ரசிகர் மன்ற தலைவரை நினைவுப்படுத்துவதோடு, அவரது நடிப்பு மற்றும் திட்டங்கள், தற்போதைய தமிழக அரசியலின் சூறாவளியாக சுழன்று வரும் ஒரு நடிகரின் செயல் வீரரை நினைவுப்படுத்துகிறது.
எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் தங்க நட்சத்திரத்துடன் பயணிக்கும் அரசியல்வாதிகளாக வலம் வந்தாலும், அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஷெரிட்டா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா பழைய காலக்கட்டங்களுக்கான காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகளை வண்ணங்கள் மூலம் வித்தியாசப்படுத்தி காட்டியிருப்பதோடு, தற்போதைய காலக்கட்டத்தினை அதிகப்படியான வண்ணங்களை பயன்படுத்தாமல் அரசியல் களங்களுடன் ஒத்துப்போகும் விதத்தில் மிக எளிமையாகவும், இயல்பாகவும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்தை கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
உச்ச நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தை மையக்கருவாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையை ஒரு கோர்வையாக தொகுத்து சுவாரஸ்யமான படமாக கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அருள் ஆர்.தங்கம்.
தம்பி ராமையாவின் கதை அரசியல்வாதிகளை மேலோட்டமாக நையாண்டி செய்தாலும், அரசியல் ஆசையில் வலம் வந்த, வலம் வந்துக் கொண்டிருக்கிற திரை நட்சத்திரங்களை நையாண்டி செய்வதோடு, அவர்களின் அரசியல் சிந்தனை மற்றும் அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் நியாயத்தையும் தொட்டு சென்றிருக்கிறார்.
தந்தையின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் உமாபதி ராமையா, தனக்கு முந்தைய காலக்கட்டத்தில் தொடங்கும் கதையை தற்போதைய காலக்கட்டத்தின் அரசியல் சம்பவங்கள் மற்றும் திரை நட்சத்திரங்களால் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
கதாபாத்திர வடிவமைப்பு மற்றும் காட்சியமைப்புகள் பலர் நட்சத்திரங்களை நினைவுப்படுத்தினாலும், யாரையும் புன்படுத்தாமல் அவர்களது அரசியல் எண்ணங்களுக்கு பின்னணியில் இருக்கும் சம்பவங்களையும், அதற்கு காரணமானவர்களையும் கற்பனையோடு சொல்லியிருந்தாலும், படம் பார்ப்பவர்களையும், சம்மந்தப்பட்ட நடிகர்களின் நலன் விரும்பி ரசிகர்களையும் யோசிக்க வைத்திருக்கிறார்.
அரசியல் நையாண்டி படம் என்று சொல்லிவிட்டு, அரசியல் களத்தில் பயணிக்க விரும்பிய மற்றும் பயணிக்கும் திரை நட்சத்திரங்களை மட்டுமே அதிகம் நையாண்டி செய்திருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா, குல்கந்த் குமார் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பல அரசியல் கேள்விகளை எழுப்புபாமல், சம்பவங்களை மட்டுமே தொகுத்திருப்பது கதையை ஒரே இடத்தில் சுழல வைத்து சற்று தொய்வடைய செய்கிறது. இருந்தாலும், காட்சிகள் மற்றும் வசனங்களில் இருக்கும் நகைச்சுவை கலந்த அரசியல் கிண்டல்கள் குறைகளை மறந்து பார்வையாளர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது.
’அமைதிப்படை’ படத்திற்குப் பிறகு நல்ல அரசியல் நையாண்டி படம் வெளியாகவில்லையே! என்ற ஏக்கத்தை போக்கும் விதமாக மட்டும் இன்றி, தற்போதைய நடிகர்களின் அரசியல் மற்றும் பதவி ஆசைக்குப் பின்னால் இருக்கும் பல சுயநலவாதிகளின் சூட்சிகளை கலகலப்பாக சொல்லி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் உமாபதி ராமையா, தேர்தல் நேரத்தில் ஒரு நேர்மையான அரசியல் படத்தை கொடுத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ’TN 2026’ அரசியலை நையாண்டியாகவும், நுணுக்கமாகவும் பேசுகிறது.
ரேட்டிங் 4/5

