‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்பட விமர்சனம்
Casting : Selvaraghavan, Kushee Ravi, RS Satish, Kousalya, Mime Gopi, Y.Gee.Mahendra, Lirthika, Salem Deepak
Directed By : Dennis Manjunath
Music By : AK Prryian
Produced By : Vijaya Sathish
சாலை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்கிறார். அவருக்கும் குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. தன்னை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார். இப்படி ஒரு தம்பதி இல்லை இந்த உலகில், என்று சொல்லும் அளவுக்கு செல்வராகவன், குஷி ரவி மகிழ்ச்சியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று குஷி ரவி தற்கொலை செய்துக் கொள்கிறார். மனைவியின் தற்கொலைக்கான அதிர்ச்சிகரமான உண்மையை தெரிந்து கொள்ளும் செல்வராகவன், அதன் பிறகு மேற்கொள்ளும் நடவடிக்கை மூலம் அந்த ஊர் மக்களுக்கு தெய்வமாகிறார். அது என்ன ? என்பதை சாமனிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சனைகளை, சமூகப் பொறுப்புடன் சொல்வதே ‘மனிதன் தெய்வமாகலாம்’.
மிகவும் சாதுவான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கும் செல்வராகவன், தன் குணத்தை நடிப்பின் மூலமாகவும் மிக சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மனைவி மீதான அன்பு, அவருக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கலங்குவதோடு, அவர் எடுக்கும் அதிரடி விஸ்வரூபம் மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார். இருந்தாலும், பல இடங்களில் அவரது நடிப்பில் செயற்கைத்தனம் தெரிகிறது. எப்போதும் அமைதியாகவே இருப்பவர், பல இடங்களில் சரியாக பேசக்கூட முடியாமல் திணறுவது ஏன்? என்று தான் தெரியவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவர்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கெளசல்யாவுக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும், தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான பல விசயங்களை தனது நடிப்பின் மூலம் நேர்த்தியாக கடத்தி கவனம் ஈர்க்கிறார்.
கந்துவட்டி கொடுப்பவராக நடித்திருக்கும் மைம் கோபி, தன் கதாபாத்திரம் மீது பார்வையாளர்கள் வெறுப்படையும் விதத்தில் நடித்திருக்கிறார். அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் வழக்கம் போல் செயற்கைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சிறுமி லிர்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் மண்ணின் மக்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களது இயல்பான நடிப்பு, அந்த மண்ணின் வாழ்க்கையை திரையில் மிக சிறப்பாக பிரதிபலித்திருக்கிறது.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் சாலை வசதி இன்றி இருக்கும் கிராமங்களின் அவலங்களையும், அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை சூழலையும் நம் கண்முன் நிறுத்துகிறது.
இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கல் அனைத்தும் மனதில் நிற்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், வலிகளையும் பார்வையாளர்கள் மனதில் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது.
ஒரு எளிமையான கிராமத்தின் வாழ்வியல் மற்றும் அந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையை பேசும் படத்தை நிதானமாக பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் தீபக்.எஸ், விறுவிறுப்பை விட அவர்களின் உணர்வுகளை பார்வையாளர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைப்பதே முக்கியம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்களின் பிரச்சனைகளோடு, கந்துவட்டி கொடுமைகளை எதிர்கொள்ளும் பெண்களின் அவலநிலையை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதற்கான திரைக்கதையை மிக எதார்த்தமாக கையாண்டிருக்கிறார்.
திரைக்கதை மெதுவாக பயணித்தாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் வேலையை மிக சரியாக செய்திருப்பவர், ஒரு சாதாரண மனிதன் எப்படி மற்றவர்களுக்கு தெய்வமாகிறார், என்ற மாற்றத்தை காட்டிய விதத்தின் மூலம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் அதில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனையை வழங்கியிருக்கிறார்.
எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு, அதை அடைவதற்கான அவர்களின் கடின உழைப்பு ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்க்கை பிரச்சனை அதன் மூலம் அவர்களுக்கு நிகழும் கொடுமையை உணர்ச்சிகர்மாக பதிவு செய்து பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்.
மொத்தத்டில், ‘மனிதன் தெய்வமாகலாம்’ இதயத்தை கனக்கச் செய்யும்.
ரேட்டிங் 3/5

