Apr 23, 2026 09:09 AM

’பிரேக்ஃபாஸ்ட்’ (BreakFast) திரைப்பட விமர்சனம்

999adadcdd6831cf38e47cc1baee779c.jpg

Casting : Raanav, Rosmin, Sampath Raj, Kasturi, Archana, Krithik Mohan, Amitha Ranganth

Directed By : AR Gandhi Krishna

Music By : G V Prakash Kumar

Produced By : Girija Varadaraj

 

ஒவ்வொறு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாறும் காதலை, தற்போதைய இளைஞர்கள் எப்படி பார்க்கிறார்கள், வேகமான வாழ்க்கைச் சூழல் கொண்ட தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் மனதில் அவசர அவசரமாக தோன்றும் காதல், அவர்கள் தம்பதியான உடன் அதை விட வேகத்தில் எப்படி பிரிவை நோக்கி பயணிக்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருப்பது தான் இப்படத்தின் கதைக்கரு.

 

தொழிலதிபரின் மகளான நாயகி ரோஸ்மின், சரியான வேலையின்றி கஷ்ட்டப்படும் கிராமத்து இளைஞர் நாயகன் ராணவுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுக்கிறார். இவர்களது நட்பு காதலாக மாற, இவர்களது காதலுக்கு நாயகியின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பை மீறி ராணவை திருமணம் செய்து கொள்ளும் ரோஸ்மின், தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியை அவருக்கு கொடுத்து, வசதியான வாழ்க்கையை அமைத்து கொடுக்கிறார். ஆனால், இவர்களது மணவாழ்க்கையில் காதலர்களாக இருந்த போது இருந்த  மகிழ்ச்சி, அன்பு பரிமாற்றம் மறைந்து, மோதலும், வெறுப்பும் அதிகரிக்கிறது. அதற்கு என்ன காரணம் ?, இப்படி காதலித்த வேகத்தை விட அதீத வேகத்தில் பிரிய வேண்டும், என்ற முடிவு எடுத்த இவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? என்பது தான் படத்தின் கதை.

 

நாயகனாக நடித்திருக்கும் பிக் பாஸ் புகழ் ராணவ், முதல் படம் போல் அல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குடும்பத்திற்காக உழைக்கும் இளைஞர், பெற்றோரை சரியாக கவனித்துக்கொள்ள முடியாமல் கலங்கும் மகன், மனைவியின் பணத்திமிரால் பாதிக்கும் கணவர் என பல்வேறு மன போராட்டங்களை தன் நடிப்பில் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரோஸ்மின், முதல் படத்திலேயே அழுத்தமான கதாபாத்திரத்தில் அளவாக நடித்து கவனம் ஈர்க்கிறார். பணக்கார பெண்களுக்கு இருக்கும் அதிரடி செயல்களையும், மற்றவர்களை மதிக்காத நடவடிக்கைகளையும் தன் நடிப்பில் சரியாக பிரதிபலித்திருப்பவர், தற்போதைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, எப்போதுமே மனைவி என்பவர் இப்படி தான்...!, என்பதை தனது ஒவ்வொரு அசைவுகளிலும் வெளிக்காட்டி ஆண்களுக்கு அச்சத்தை மூட்டுகிறார்.

 

மற்றொரு நாயகன், நாயகியாக நடித்திருக்கும் கிரித்திக் மோகன் - அமிதா ரங்கநாத் ஜோடி, வயதுக்கு ஏற்ப துள்ளல் மற்றும் மோதல் நடிப்பை வெளிப்படுத்தி திரைக்கதைக்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

 

BreakFast Review

 

நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சம்பத் ராஜ், மருத்துவராக நடித்திருக்கும் கஸ்தூரி, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் அர்ச்சனா ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

எம்.வி.பன்னீர் செல்வத்தின் ஒளிப்பதிவு கலர்புல்லாக, கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள், அந்த அளவுக்கு பாடல்களில் அவரது திறன் வெளிப்படவில்லை. பின்னணி இசைக்கும் அதே நிலை தான்.

 

எஸ்.பாஸ்கர் மற்றும் சுஜித் ஆகியோரது படத்தொகுப்பு, கதாபாத்திரங்களிடத்தில் இருக்கும் உணர்வுகளை பார்வையாளர்களிடத்தில் கடத்தியிருக்கிறது.

 

தற்போதைய காலக்கட்டத்தில், சோசியல் மீடியா அறிமுகம், அடுத்த நாளே  காதல் பரிமாற்றம், உடனே கல்யாணம் என்று அவசரம் அவசரமாக முடிவு எடுக்கும் இளைஞர்கள், அதை விட அவசரமாக பிரிவு முடிவையும் எடுப்பது ஏன்? என்ற கேள்விக்கு உணர்வுப்பூர்வமாக பதிலளித்திருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, தற்போதைய காலக்கட்டத்தில் தம்பதியினர் இடையே ஏற்படும் பிரிவுக்கு காரணமாக, ஆண்டு ஆண்டு காலமாக நடக்கும் பழைய காரணத்தையே சொல்லியிருக்கிறார்.

 

தற்போதைய காலக்கட்ட காதல் மற்றும் காதலர்களைப் பற்றி அதிகம் அலசாமல், குடும்ப பிரச்சனை அதன் மூலம் ஏற்படும் பிரிவு ஆகியவற்றை அதிகமாக பேசியிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா, அதை கொஞ்சம் பழைய முறையிலேயே பேசியிருப்பது திரைக்கதையின் வேகத்தையும், காதலில் இருக்கும் சுவாரஸ்யத்தையும் குறைத்து விடுகிறது. அதே சமயம், காதலர்களுக்கும், தம்பதிகளுக்கும் அறிவுரை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் நிச்சயம் பார்வையாளர்களை யோசிக்க வைக்கும்.

 

மொத்தத்தில், ‘பிரேக்ஃபாஸ்ட்’ பிரிவு எண்ணத்தை பின்னுக்கு தள்ளிவிடும்.

 

ரேட்டிங் 3/5