‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X) திரைப்பட விமர்சனம்
Casting : Jayaprakash, Kaali Venkat, Raiza, Athulya, Anagha, Manju Warrier, Gautham Ram Karthik, Sarath Kumar, Arya
Directed By : Manu Anand
Music By : Dhibu Ninan Thomas
Produced By : Shri Vineet Jain, S Lakshman Kumar
இந்திய முதன்மை வெளிநாட்டு உளவு அமைப்பான ராவில் பணியாற்றும் உளவாளியான சரத்குமார், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருள் ஒன்றை பல வருடங்களாக பல்வேறு நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்து பாதுகாத்து வருகிறார். இதற்காக தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் சரத்குமாரை கைது செய்யும் ரஷ்ய ராணுவம், அவர் பாதுகாத்து வந்த மூலப்பொருளையும் கைப்பற்றுவதோடு, அதை பாகிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்கிறது.
ரஷ்ய ராணுவத்தின் திட்டத்தை முறியடித்து, சரத்குமார் மற்றும் அணு ஆயுத மூலப்பொருளை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை ரா அதிகாரியான மஞ்சு வாரியர் தலைமையிலான குழு மேற்கொள்கிறது. ஆனால், அது தோல்வியில் முடிந்ததால், அவரை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கையில் இந்திய பாதுகாப்புத் துறை ஈடுபடுகிறது. அங்கிருந்து தப்பிக்கும் மஞ்சு வாரியர், மற்றொரு உளவாளியான ஆர்யா மூலம் மீண்டும் அந்த பணியில் ஈடுபட்டு சரத்குமாரை காப்பாற்றி, ஆணு ஆயுத மூளப்பொருளை இந்தியாவுக்கு எடுத்து வரும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த முறை இவர்களுக்கு முயற்சி வெற்றி பெற்றதா, அந்த மூலப்பொருளை வைத்து மேற்கொள்ள இருந்த மிகப்பெரிய சதிவேலை முறியடிக்கப்பட்டதா? என்பதை ஆங்கிலப் படங்களுக்கு நிகராக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr.X).
"புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்டது" என்ற பழமொழிக்கு ஏற்ப, ஆங்கிலப் படங்களை பார்த்து தங்களது ஆற்றலை மறந்து, தாங்கள் சொல்ல வந்த கதையை தறிக்கெட்டு பயணிக்க வைத்து, பார்வையாளர்களை படாதபாடு படுத்தும் படங்களின் வரிசையில் இந்த ‘மிஸ்டர்.எக்ஸ்’ படத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு.
உளவாளிகள் பற்றி யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம், ஆனால் அதில் குறைந்தபட்ச உண்மை தன்மை இருந்தால் மட்டுமே அந்த படங்கள் பார்வையாளர்களை பாதிக்கும். ஆனால், இயக்குநர் மனு ஆனந்த், உளவாளிகளை ஏதோ சுற்றுலாவாசிகள் போல், நினைத்தால் வேறு ஒரு நாட்டில் பயணிப்பது, அங்கிருந்து பயங்கரமான ஒரு பொருளை மிக எளிமையாக இந்தியாவுக்கு எடுத்து வருவது, என்று மசாலா படங்களையும் தாண்டிய ஒரு மிகப்பெரிய மசாலா தொழிற்சாலையை படமாக கொடுத்திருக்கிறார். அதிலும், உளவாளிகளையே வில்லன்களாக்கி, அவர்களுக்குள்ளேயே கண்ணாம்பூச்சி ஆட்டத்தை நிகழ்த்தியிருப்பவர், அதற்காக பல கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார். ஆனால், அவர்களால் திரைக்கதைக்கு எந்தவித பலமும் கிடைக்காமல் செய்திருப்பதோடு, கதையின் நாயகன் கதாபாத்திரத்தையே பலவீனப்படுத்தியிருப்பது தான் பெரும் சோகம்.
நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா, தன் வலிமையான உடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் தன்னை திறமையான உளவாளியாக வெளிக்காட்டியிருக்கிறாரே தவிர குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் எந்த வேலையையும் அவர் செய்யவில்லை. நடிப்பு வழக்கம் போல் சுமாராகவே இருந்தது.
மிஸ்டர் எக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சரத்குமாரை, ‘தி ராக்’ ஆங்கிலப் படத்தில் வரும் ஷான் கானரி போல் வடிவமைத்திருந்தாலும், அந்த வேடம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதே சமயம், கிளைமாக்ஸில் எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்தும் அந்த கதாபாத்திரத்தின் அதிரடி, இரண்டாம் பாகத்தில் இருக்கலாம், என்ற எதிர்பார்ப்பை மட்டும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
உளவாளியாக அறிமுகமாகி வில்லனாக மிரட்டும் கெளதம் கார்த்திக், தனது உருவத்திற்கு பொருந்தாத ஒரு கதாபாத்திரத்திற்கு தன்னால் முடிந்தவரை நியாயம் சேர்க்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் சில வெற்றி பெற்றாலும், பல தோல்வியடைந்திருப்பதை மறுக்க முடியாது.
ரா அமைப்பு அதிகாரியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், ரய்சா வில்சன், அதுல்யா ரவி, காளி வெங்கட், அனேகா, ஜெயப்பிரகாஷ் என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும், யாரும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட் பிரமாண்டமான லொக்கேஷன்கள் மூலம் காட்சிகளை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார்.
பின்னணி இசை மூலம் காட்சிகளுக்கு உயீரூட்டுவதற்கு திபு நினன் தாமஸ் கடுமையாக உழைத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதீத சத்தம் இல்லாமல் அளவான பின்னணி இசையை கொடுத்து ரசிக்க வைத்திருப்பவர், எதிர்பார்த்த அளவுக்கு எந்தவொரு தனித்துவமான பணியையும் செய்யவில்லை.
படத்தொகுப்பாளர் பிரசன்னா.ஜி.கே, சண்டைப்பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன் என தொழில்நுட்ப கலைஞர்களின் கடும் உழைப்பு திரையில் தெரிந்தாலும், அழுத்தம் இல்லாத திரைக்கதை மற்றும் நம்பகத்தன்மை அற்ற காட்சி வடிவமைப்புகளால் அது பார்வையாளர்களிடத்தில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் மனு ஆனந்த், இந்தியாவில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், அதை அதீத கமர்ஷியல் ஆக்ஷன் பாணியில் சொல்லி படத்தை பலவீனமடைய செய்திருக்கிறார்.
ரா உளவாளியின் குடும்பம், பிரிந்த அவர்களது குழந்தைகள், மீண்டும் அவர்கள் ஒன்று சேர்வது, உளவாளியே வில்லனாக உருவெடுப்பது மற்றும் கண்ணுக்கு தெரியாத உலக குற்றவாளியின் பின்னணி என்று கதையில் பல அடுக்குகள் மற்றும் கதாபாத்திரங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் ஆங்கிலப் படங்களின் மோகத்தால் உருவானதாக இருக்கிறதே தவிர உண்மை சம்பவத்திற்கு நெருக்கமாகவோ அல்லது படம் பார்ப்பவர்களை பாதிக்கும்படியோ இல்லை. குறிப்பாக, ராணா என்ற கண்ணுக்கு தெரியாத குற்றவாளியை யாரும் பார்க்காத நிலையில், ஒரு சாதாரண கிராமத்து மனிதரிடம் மட்டும் தன்னை ராணா எப்படி அறிமுகப்படுத்திக் கொண்டிருப்பார், அதற்கு என்ன அவசியம் இருக்கிறது, இப்படி படத்தில் பல லாஜீக் மீறல்கள் இருக்கிறது.
படத்திற்காக செய்யப்பட்டிருக்கும் செலவு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பாராட்டும்படியாக இருந்தாலும், இயக்குநர் மனு ஆனந்த், அதை சரியான முறையில் சொல்ல தவறியிருப்பதோடு, உண்மைக்கு நெருக்கமாக சொல்லவும் தவறியிருப்பதால் படம் பார்வையாளர்களிடம் ஒட்ட மறுக்கிறது. அதே சமயம், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, ஒரு ஆக்ஷன் படத்தை பார்த்தால் போதும் என்று நினைப்பவர்களை இந்த படம் திருப்திப்படுத்த வாய்ப்பிருக்கிறது.
மொத்தத்தில், ‘மிஸ்டர்.எக்ஸ்’ எடுபடவில்லை.
ரேட்டிங் 2.7/5

