’கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ திரைப்பட விமர்சனம்
Casting : Veera Anbarasu, Angel, Publu Prithviraj, Robo Shankar, Super Good Subramani, Vazhai Janagai, Perarasu, Aravindaraj, Mullai, Akash Muthu
Directed By : Veera Anbarasu
Music By : Sivaraman and Karthik Raja
Produced By : AAA Pictures - Anuradha Anbarasu
ராணுவ கமாண்டோவான நாயகன் வீர அன்பரசு, பேருந்து பயணம் ஒன்றில் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி மேற்கொள்ளும் நாயகி ஏஞ்சலை சந்திக்கிறார். இருவரும் நட்பாக பழக, அது காதலாக மாறுகிறது. ஆனால், இருவரும் தங்கள் மனதில் உள்ள காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். தன் காதலை கடிதம் மூலம் வெளிப்படுத்த முடிவு செய்யும் வீர அன்பரசு, அந்த கடிதத்தை நாயகியிடம் கொடுக்க தயங்குகிறார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சரின் மகளை கடத்தி வைத்துக் கொண்டு தீவிரவாத கும்பல் மிரட்டுகிறது. அந்த கும்பலை அழித்து, அமைச்சரின் மகளை பத்திரமாக மீட்கும் பொறுப்பு வீர அன்பரசுவிடம் ஒப்படைக்கபப்டுகிறது. தன் குழுவினருடன் தீவிரவாத கூட்டத்துடன் மோதுவதற்கு காட்டுப்பகுதிக்கு செல்லும் வீர அன்பரசு, அமைச்சர் மகளை காப்பாற்றுவதிலும், தன் மனதில் உள்ள காதலிலும் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை தேச உணர்வோடும், காதல் உணர்வோடும் சொல்வது தான் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’.
யுத்தங்களும், துப்பாக்கி சந்தங்களும் நிறைந்த ஒரு ராணுவ வீரரின் மனதில் உருவெடுத்த காதலை வழக்கமான காதல் கதையாக அல்லாமல் புதுமையான மற்றும் புரட்சிகரமான காதல் கதையாக சொல்லி காதலுக்கும், ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செய்திருக்கிறார் இயக்குநர் வீர அன்பரசு.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் வீர அன்பரசு, ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடித்தாலும், சண்டைக்காட்சிகளை அளவாக கையாண்டு, காதல் காட்சிகளை அழகாக கையாண்டு தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ராணுவ வீரராக மக்களிடத்தில் தேச பக்தியை வளர்த்திருப்பவர், தன் நாகரீகமான காதல் மூலம் காதலையும், காதலர்களையும் கெளரவப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஏஞ்சல் பெயருக்கு ஏற்ப தேவதையாக வலம் வருகிறார். அழகில் மட்டும் இன்றி தனது பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து நடிப்பிலும் தன்னை நிரூபித்திருக்கிறார்.
இளம் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஆகாஷ் முத்து மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை இருவரும் வயதுக்கு ஏற்ற துள்ளல் நடிப்பில் பார்வையாளர்களை ஈர்க்கின்றனர். குறிப்பாக ஆகாஷ் முத்து, நடிகர் பிரபுவை நினைவுப்படுத்துகிறார்.
ரோபோ சங்கர், பப்லு பிருத்திவிராஜ், பேரரசு, அரவிந்தராஜ், வாழை ஜானகி, மதுமிதா, விஜய் டிவி முல்லை, புதுப்பட்டு சக்திவேல், சிரஞ்சீவி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாய்ஸ் ராஜன், ஓ.ஏ.கே.சுந்தர், துரைபாண்டியன், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா, நிஷா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் காட்சிகளை கலர்புல்லாகவும், தரமாகவும் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் கண்களுக்கு காட்சி விருந்து படைத்திருக்கிறது.
சிவராமனின் இசையில் பாடல்களில் காதல் ரசம் தரைபுரண்டு ஓடுகிறது. திரும்ப திரும்ப கேட்கும் விதத்தில் அனைத்து பாடல்களும் அமைந்திருக்கின்றன. கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் காதல் உணர்வையும், நாட்டுப்பற்றையும் பார்வையாளர்களிடத்தில் கடத்துகிறது.
படத்தொகுப்பாளர் சி.ஆர்.புவனேஷ், வித்தியாசமான காதல் கதையை தொய்வின்றி நகரும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் வீர அன்பரசு, காதலர்கள் மறைந்தாலும் காதல் மறைவதில்லை, என்பதை வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறார்.
காதல் கதையாக இருந்தாலும், தேவையற்ற காட்சிகளை திணிக்காமல் தான் சொல்ல வந்ததை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் வீர அன்பரசு, தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், காதல் வந்துவிட்டால் எத்தகைய வீரனுக்கும் மனதில் திக்...திக்...அடிக்கும் என்பதை காட்சிகள் மூலம் சொல்லி, காதலை ரசிக்க வைத்திருக்கிறார்.
தன் மனதில் இருக்கும் காதலை சொல்லாமல் யுத்த களத்திற்கு பயணிக்கும் நாயகன், திரும்பி வந்து தன் காதலை சொல்வாரா? என்ற கேள்வியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர் வீர அன்பரசு, அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை எதிர்பார்க்காத விதத்தில் சொல்வதோடு, கதையை வித்தியாசமான முறையில் கையாண்டு காதல் புரட்சி செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ’கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ பாராட்ட வேண்டிய கதை.
ரேட்டிங் 3.5/5

