Nov 11, 2018 07:25 AM

நடிகர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றும் ’96’ பட தயாரிப்பாளர்! - சங்கம் கிடுக்குபிடி

நடிகர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றும் ’96’ பட தயாரிப்பாளர்! - சங்கம் கிடுக்குபிடி

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற ‘96’ படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் தயாரித்த எஸ்.நந்தகோபல், தொடர்ந்து நடிகர்களுக்கு ஊதியம் வழங்காமல் ஏமாற்றுவதால், அவருக்கு இனி நடிகர்கள் யாரும் ஒத்துழைப்பு தர கூடாது, என்று நடிகர் சங்கம் உத்தரவிட்டுள்ளது.

 

இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

’மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ தயாரிப்பான ‘துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் விஷால் நடித்தமைக்காகவும், ‘வீரசிவாஜி’ என்ற திரைப்படத்தில் விக்ரம்பிரபு அவர்கள் நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி வழங்கப்படாமல் உள்ளது.

 

மேலும் ‘96’ என்ற திரைப்படத்தில் நடித்த சங்க உறுப்பினர் விஜய்சேதுபதி ஊதிய பாக்கி பெற்றுக் கொள்ளாமலேயே திரைப்படம் திரையிடப்பட்டது. 

 

மேற்கண்ட திரைப்படங்கள் திரையிடும் கடைசி நேரத்தில் நடிகர்களின் சூழ்நிலையை இந்த தயாரிப்பு நிறுவனம் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொடர்ந்து ஊதியம்  வழங்காமல்  படங்களை  திரையிட்டுள்ளது. 

படம் வெளியீட்டின் போது இக்கட்டான சூழ்நிலையில் என்றும் நடிகர்கள் தங்கள் வருமானத்தை விட்டுக்கொடுத்தே தயாரிப்பாளர்களுக்கு உதவி வருகிறார்கள். ஆனால் அந்நற்செயலை பலவீனமாக எடுத்துக்கொண்டு சில தயாரிப்பாளர்கள் நடிகர்களை நிர்பந்தப்படுத்துவது அல்லது பரஸ்பரம் ஒத்துக்கொண்ட சம்பளத்தை தர மறுப்பது என்பதை வழக்கமாக்கி கொண்டது. 

 

கடந்த காலங்களிலிருந்தே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு இதுப்போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் இதுகுறித்து நிர்வாகக்குழு கலந்து ஆலோசித்தது. 

 

அதனடிப்படையில் இனிவரும் காலங்களில் இதுப்போன்று செயல்படும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும், தயாரிப்பாளருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ந்த உறுப்பினர்கள் (நடிகர்கள்/நடிகையர்கள்) எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது. 

 

அதனடிப்படையில் தற்போது மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பு நிறுவனம் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்விற்கும் திரைப்படங்களுக்கும் நமது சங்க உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.