Jun 02, 2024 05:49 AM

விஜய் சேதுபதி தேடும் ‘லட்சுமி’ யார்? - இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் விளக்கம்

விஜய் சேதுபதி தேடும் ‘லட்சுமி’ யார்? - இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் விளக்கம்

விஜய் சேதுபதியின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘மஹாராஜா’. ‘குரங்கு பொம்மை’ பட புகழ் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்க, இயக்குநர் பாரதிராஜா, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, அருள்தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், டிரைலரில் விஜய் சேதுபதி, ”தனது வீட்டில் இருந்த லட்சுமி காணவில்லை” என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். அதற்கு லட்சுமி யார்? என்று காவலர்கள் கேட்க, விஜய் சேதுபதியின் பதில்கள் முரணாக இருப்பதால் காவலர்கள் குழப்பமடைய, அதை தொடர்ந்து விஜய் சேதுபதி தனது லட்சுமியை கண்டுபிடித்து கொடுக்கவில்லை என்றால்.., என்று காவலர்களை எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார். இப்படி டிரைலர் முழுவதும் “லட்சுமி யார்?” என்ற கேள்வி பயணிக்க, படத்தில் லட்சுமி மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

 

இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் மற்றும் நாயகி மம்தா மோகன்தாஸ், நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, விஜய் சேதுபதி தேடும் லட்சுமி யார்? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், ”அதை நான் இப்போது சொல்ல முடியாது, அந்த சஸ்பென்ஸை படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள். லட்சுமி என்பது பெண்ணா அல்லது ஒரு பொருளா என்பது அவர் அவர் பார்வைக்கு உட்பட்டது. ரசிகர்கள் லட்சுமியை எப்படி பார்க்கிறார்களோ, அப்படியே விட்டுவிடுகிறேன்.” என்றார்.

 

Maharaja

 

தொடர்ந்து படம் குறித்து பேசிய நித்திலன், “நீங்கள் இப்போது டிரைலரில் பார்த்தது வெறும் 20 சதவீதம் தான், மீதி 80 சதவீதம் படத்தில் இருக்கிறது. இந்த படத்தை நான் இயக்கும் போது விஜய் சேதுபதி அண்ணாவின் 50 வது படம் என்று தெரியாது, அவரிடம் கதை சொன்ன போது கூட தெரியாது, படப்பிடிப்பு தொடங்கிய போது தான் தெரியும். அனைத்து படத்தையும் கவனமாக தான் செய்வேன், சேது அண்ணாவின் 50 வது படம் என்பதால் கொஞ்சம் பொறுப்பு கூடியிருக்கிறது. ஒரு சாதாரண மனிதன், பெரிய படிப்பு அறிவு இல்லாதவர், அவர் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்தால் அதை அவர் எப்படி எதிர்கொள்வார், அதன் மூலம் தான் யார்? என்பதை அவர் அறிந்துக்கொள்கிறார், என்பதை சஸ்பென்ஸாக சொல்லியிருக்கிறேன்.

 

லட்சுமி யார்? என்ற சஸ்பென்ஸ் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பயணிக்கும். ஆனால், படத்தின் மிகப்பெரிய பலமே அந்த ஒரு கேள்வி மட்டும் அல்ல, அதை சுற்றி மேலும் பல சுவாரஸ்யங்கள் படத்தில் இருக்கின்றன. அவை அனைத்தும் முழு படத்தையும் சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும். நிச்சயம் இந்த படம் ரசிகர்களை முழுமையான திருப்திப்படுத்தும். அதனால் தான் டிரைலர் 20 சதவீதம் என்று சொன்னேன், 80 சதவீதம் படத்தில் இருக்கிறது. படம் பார்த்தவர்கள் அனைவரும் படம் நன்றாக வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார்கள். சேது அண்ணாவும் குடும்பத்துடன் படத்தை பார்த்தார், அவருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொன்னதுடன், படத்தில் அவரையும் பிடித்திருப்பதாக சொன்னார்.

 

படத்தில் சேது அண்ணாவின் பெயர் மஹாராஜா, அவர் வாழ்க்கையும் அதுபோல் தான் இருக்கும். அவரை சிகை அலங்கார கலைஞராக நடிக்க வைத்ததற்கு காரணம், வாழ்க்கையில் நிறைய பேரை சந்திப்போம், அதில் சிலர் நம் மனதுக்கு நெருக்கமாக இருப்பார்கள். அப்படி நான் பார்த்த மனிதர்களை கொண்டு தான் அப்படி ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தேன், மற்றபடி சிலை அலங்கார தொழில் மற்றும் சாதி பற்றி படத்தில் எதுவும் பேசவில்லை.” என்றார்.

 

நடிகை மம்தா மோகன் தாஸ் கூறுகையில், “தமிழ் சினிமாவில் அதிக இடைவெளி விழுந்துவிட்டது. காரணம், நான் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன். மஹாராஜா படத்தில் நல்ல கதாபாத்திரம் கிடைத்தது அதனால் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். ஆஷிபா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போதைக்கு என் கதாபாத்திரம் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும். ஏனென்றால் என் கதாபாத்திரத்தை சுற்றி நிறைய சஸ்பென்ஸ் இருக்கிறது, அதனால் விரிவாக சொல்ல முடியாது.” என்றார்.

 

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யம் நடித்தது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த இயக்குநர் நித்திலன், “எனக்கு பிடித்தவர்களில் அனுராக் காஷ்யப் சாரும் ஒருவர். எனக்கு பிடித்தவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதேபோல் அந்த கதாபாத்திரத்திற்கு  அவர் பொருத்தமாக இருந்ததாலும் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தேன். முதலில் அவரிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டேன். பிறகு அவரது தேதியில் மாற்றம் ஏற்பட்டதால் அவர் நடிக்க முடியாத சூழல் உருவானது. இதனால், வேறு சில நடிகர்களை பார்த்தோம், ஆனால் யாரும் செட்டாகவில்லை. இறுதியில் அனுராக் சாரே அந்த வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி. பாராதிராஜா சாரும் எனக்கு பிடித்தவர், அவரையும் நடிக்க வைத்திருக்கிறேன். குரங்கு பொம்மை படம் போல் அவரது வேடம் இல்லை என்றாலும், ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார்.” என்றார்.

 

 

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ’காந்தாரா’ புகழ் அஜனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இவர் ’காந்தாரா’ படத்திற்கு முன்பு நித்திலனின் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். வி.செல்வகுமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

தணிக்கை செய்யப்பட்டு யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் ‘மஹாராஜா’ திரைப்படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.