பிரகாசமான பயணத்தின் துவக்கமே ‘பரியேறும் பெருமாள்’ - சித்தார்த் வாழ்த்து

இயக்குநர் ப.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (செப்டம்பர் 28) வெளியாக உள்ள ‘பரியேறும் பெருமாள்’ ரசிகர்களிடம் மட்டும் இன்றி திரையுலக பிரமுகர்களிடமும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளரான மாரி செல்வராஜின் முதல் படமான இப்படம், மனிதர்களின் வாழ்வியலை எதார்த்தமாக படமாக்கியிருப்பதாலும், இயக்குநர் ரஞ்சித் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம் என்பதாலும் எதிர்ப்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. இதில் விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டு படத்தை பார்த்துள்ளனர். படத்தை பர்த்த அனைவரும் இயக்குநர் மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக வருவார், என்று வாழ்த்தியுள்ளனர்.
நடிகர் சித்தார்த் படத்தை பார்த்துவிட்டு, “தமிழ் சினிமாவின் பிரகாசமான புதிய பயணத்தின் துவக்கம் தான் ‘பரியேறும் பெருமாள்’ என்று வாழ்த்தியுள்ளார். மனிதர்களின் வாழ்வியலை ஒரிஜாலிட்டி மாறாமால், இந்த அளவுக்கு எதார்த்தமாக இதுவரை யாரும் சொன்னதில்லை, என்றும் கூறிய அவர் நடிகர் கதிரின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.
படத்தை பார்த்த பலர், ‘பரியேறும் பெருமாள்’ சிறப்பாக வந்திருப்பதாக கூறி வரும் நிலையில், சித்தார்த் போன்ற முன்னணி நடிகர்களின் பாராட்டு இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.