Dec 15, 2018 05:30 PM

இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் ‘அடங்க மறு’ - ஜெயம் ரவி பேச்சு

இன்றைய சூழலுக்கு மிகவும் தேவையான படம் ‘அடங்க மறு’ - ஜெயம் ரவி பேச்சு

அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடங்க மறு’. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார்.  

 

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை கிளாப் போர்ட் புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ஜெயம் ரவி,  ராஷி கண்ணா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, “ரிலீஸுக்கு முன்பு தான் நாங்க பேசணும், ரிலீஸூக்கு பிறகு ரசிகர்கள் தான் பேசணும், நாங்க பேசக்கூடாது. எனக்கு மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தது எல்லாமே புது இயக்குநர்கள் தான். அந்த வகையில் கார்த்திக்குக்கு இந்த படம் அமையும். முதல் படத்தில் இருந்து இன்று வரை எனக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்தே வந்திருக்கிறார். சுஜாதா விஜயகுமார் தயாரிப்பாளராக முதல் படம், கேட்டதை விடவே அதிகமாக செய்து கொடுத்தவர். ராஷி கண்ணா சமூகத்துக்கு நல்ல விஷயங்கள் நிறைய செய்பவர். ஒரே நேரத்தில் எத்தனை படங்களுக்கு இசையமைத்தாலும் நல்ல இசையை கொடுக்கிறார் சாம். ஒரு படத்தின் முதல் முகவரியே டீசர், ட்ரைலர் தான், அதை கட் செய்றதுல ரூபன் ஒரு கிங். எம் குமரன் படத்துக்கு விஜி தான் வசனம் எழுதினார், மிகப்பெரிய வெற்றி. அடுத்து இந்த படத்துக்கு தான் எழுதியிருக்கிறார், நிச்சயம் பெரிய ஹிட் ஆகும். ஒரே படத்துக்குள் பல முக்கிய கதாபாத்திரங்களை வைத்து, எல்லாமே மனதில் நிற்கும் வகையில் எழுதியிருப்பது தான் இது சிறப்பு. ஜீவா சாருக்கு பிறகு சத்யன் ஒளிப்பதிவில் நடித்தது எனக்கு ரொம்பபே பிடித்தது. இன்றைய சூழலுக்கு மிகவும்  தேவையான படம் அடங்க மறு. வரும்  21ஆம் தேதி வெளியாகும் எல்லா படங்களும் வெற்றி பெறணும், அப்போ தான் தமிழ் சினிமா நல்லா இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் கார்த்திக் தங்கவேல் பேசும் போது, “நான் 10 வருடம் முன்பே இயக்குநராக வேண்டியது, ஆனால் தள்ளி போட்டுக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் கதையை சுஜாதா விஜயகுமார் அவர்களிடம் சொன்னேன், அவருக்கு பிடித்து போனது, ஜெயம் ரவியிடம் கதையை சொல்லுங்க, பிடிச்சா பண்ணலாம் என்றார். நான் இதயதிருடன் படத்தில் முதலில் ஆரம்பிச்சதும் ஜெயம் ரவியிடம் தான், கடைசியாக ஆதி பகவன் படத்தில் முடித்ததும் அவரிடம் தான். கடந்த 3 வருடங்களில் நான் பார்த்த சம்பவங்களை வைத்து எழுதிய கதை. நான் எழுதுயிருந்தத கதை ரொம்பவே ராவாக இருந்தது, அதன்பிறகு 40 காட்சிகளை மாற்றி எழுத வேண்டியிருந்தது. ரூபன், இளையராஜா என எல்லோருமே கடும் உழைப்பாளிகள், ஆரம்பத்தில் இருந்தே நண்பர்கள். எதையும் யூகிக்க முடியாத அளவுக்கு, இந்த படத்தில் வித்தியாசமான நடிகர்கள் பலர் தேவைப்பட்டனர். நான் நினைத்த மாதிரி நடிகர்கள் கிடைத்தது பெரிய வரம். ஜெயம் ரவியை விட ராஷி கண்ணாவுடன் வேலை பார்க்கும் போது தான் எனக்கு மிகவும் பதட்டமாக இருந்தது. விஜி சார் வசனம் படத்துக்கு மிகப்பெரிய பலம், இந்த படத்தோடு ரிலீஸ் ஆகும் எல்லா படமும் நல்லா ஓடணும்.” என்றார். 

 

Adanga Maru

 

ராஷி கண்ணா பேசுகையில், “’அடங்க மறு’ தமிழில் என்னுடைய இரண்டாவது படம், என்னை தமிழ் சினிமாவில் வரவேற்ற அனைவருக்கும் நன்றி. என்னுடைய சொந்த கம்பெனி படத்தில் நடித்த மாதிரி உணர்ந்தேன், அந்த அளவுக்கு என்னை தயாரிப்பாளர்கள் பார்த்துக் கொண்டனர். ஜெயம் ரவியின் குணம் தான் அனைத்து கதாநாயகிகளுடன் அவரது கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைய காரணம். இயக்குநர் கார்த்திக் கதையை சொன்ன போது, அவரின் சிந்தனையை நினைத்து வியந்து போனேன். பெண்கள் கதாபாத்திரங்களை மிக உயர்வாக வடிவமைத்திருக்கிறார்.” என்றார்.

 

தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் பேசும் போது, “இந்த படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே திறமைசாலிகள், அனுபவசாலிகள். கார்த்திக் இந்த கதையை என்னிடம் சொன்ன போது நான் வியந்து போனேன். சீரியலில் பெண்களை மையப்படுத்திய கதைகளை தான் தேர்ந்தெடுப்போம். அந்த மாதிரி பெண்கள் பிரச்சினையை மையப்படுத்திய இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது. ஜெயம் ரவி மாதிரி நல்ல கருத்துக்களை படத்தில் சொல்ற நடிகர்கள் நடிச்சா தான் நல்லா இருக்கும் என முடிவெடுத்தோம். இந்த படம் பேசும் கருத்துக்கள் எல்லோரையும் சிறப்பாக சென்றடையும்.” என்றார்.

 

இந்த சந்திப்பில் நடிகர்கள் சம்பத், அழகம்பெருமாள், பொன்வண்ணன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கஜராஜ், மேத்யூ வர்கீஸ், மைம் கோபி, சுப்பு பஞ்சு, முனீஷ்காந்த், கலை இயக்குநர் இளையராஜா, வசனகர்த்தா விஜி, தயாரிப்பாளர் ஆனந்த் ஜாய் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.