முருகதாஸ் காலில் விழுந்து வணங்கினார்! - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பாக்யராஜ்

விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் ‘சர்கார்’ படத்தின் கதை என்னவென்று உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதற்கு காரணம், எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருந்த பாக்யராஜ் தான்.
‘சர்கார்’ படத்தின் கதை தனது கதை, என்று கூறிய உதவி இயக்குநர் வருணுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாக்யராஜ், சர்கார் படத்தின் கதை, வருணின் செங்கோல் கதைப் போல இருக்கிறது, என்று கூறியதோடு, இரண்டு கதைகளை முழுகா சொல்லிவிடார். மேலும், இந்த விவகாரத்தில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சமரசம் என்ற முடிவுக்கு வந்த சர்கார் தரப்பு, வருணுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளது.
இதற்கிடையே, எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியை பாக்யராஜ், திடீரென்று ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து பாக்யராஜ் மிரட்டப்பட்டிருப்பதாக தகவல் பரவ, எழுத்தாளர் சங்கமும் பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க மறுத்தது. இருப்பினும், தான் ராஜினாமா செய்தது செய்தது தான், என்று பாக்யராஜ் கூறிவிட்டார்.
இந்த நிலையில், சர்கார் விவகாரம் குறித்து இன்று பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாக்யராஜ், “வருண் ஏன் கோர்ட்டுக்கு வெளியில் வந்து விஜய்யின் அப்பா எஸ்ஏசிக்கு நன்றி கூறினார் என தெரியவில்லை. நான் அவருக்கு சொல்லிக்கொடுத்தது வேறு, ஆனால் வருண் மீடியா முன்பு வேறு எதோ பேசிவிட்டார்.” என்று கூறியவர், வருண் பாக்யராஜுடன் பணியாற்றியவர் என்ற முருகதாஸின் குற்றச்சாட்டுக்கு, “சர்கார் பற்றி புகார் அளிக்க வரும் முன் வருணை பார்த்ததே இல்லை” என்று பதில் அளித்தார்.
அதுமட்டும் இன்றி, முருகதாஸ் தன்னை எப்போது எங்கு பார்த்தாலும் காலில் விழுந்து வணங்கும் அளவுக்கு தன் மீது மரியாதை கொண்டவர், என்று கூறிய பாக்யராஜ், தன்னை யாரும் மிரட்டவில்லை, என்றும் கூறினார்.