Jan 04, 2019 11:41 AM

பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா

பாலிவுட்டில் அறிமுகமாகும் பாவனா

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்த நடிகை பாவனா ராவ், ‘பை பாஸ் ரோடு’ என்ற படத்தின் மூலம் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். 

 

‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘விண்மீன்கள்’, ‘வனயுத்தம்’ போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை பாவனா ராவ். இவர் நிறைய கன்னட படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக இருக்கிறார். 2017 ஆம் ஆண்டில் வெளியான ‘சத்ய ஹரிஷ்சந்திரா ’ என்ற கன்னட படத்தில் சிறப்பாக நடித்தற்காக விருதும் பெற்றவர். இவர் தற்போது சிவராஜ்குமார், சுதீப், எமி ஜாக்சன் நடிப்பில் தயாராகும் த வில்லன் என்ற படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.தொடர்ந்து தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து வந்தாலும் இவர் ஹிந்தியில் நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். 

 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதீன் முகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் பை பாஸ் ரோட் என்ற படத்தில் இவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதன் மூலம் ஹிந்தியிலும் இவர் நாயகியாக அறிமுகமாகிறார்.

 

இது குறித்து பாவனா ராவ் பேசுகையில்,‘ கன்னட படங்களில் நடித்து வந்தாலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது இயக்குநர் நமன் நிதீஷ் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. இதன் கதையை இயக்குநர் என்னிடம் விவரித்த போதே இதில் நடிக்கவேண்டும் என்று உறுதியாக இருந்தேன். ஏனெனில் திரைக்கதையில் எனக்கு வலுவான கேரக்டர். கதைப்படிசொகுசாக வாழ விரும்பும் பெண். அதற்காக சில குறுக்கு வழிகளிலும் சவாலுடன் பயணிக்க விரும்புவள். இந்த படத்தின் படபிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதன் அடுத்தக்கட்ட படபிடிப்பு பொங்கலுக்கு பிறகு தொடங்குகிறது.இந்த ஆண்டு மிகச் சிறப்பாக ஆரம்பமாகியிருக்கிறது. முதன்முதலாக ஹிந்தி திரையுலகில் அடியெடுத்து வைக்கிறேன். அங்கும் எனக்கு சிறந்த வாய்ப்புகள் அமையும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.” என்றார்.

 

அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான இவர் நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவர். தற்போது இரண்டு முன்னணி நடிகர்களின் கன்னட படங்களில் நடிக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் புகழ் பெற்றது போல், ஹிந்தியிலும் வெற்றிப் பெறுவார் என்கிறார்கள் இவரது ரசிகர்கள். 

 

இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் நீல் நிதீன் முகேஷ், விஜய் நடித்த கத்தி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்பதுடன், பாகுபலி படப்புகழ் பிரபாஸ் தற்போது நடித்து வரும் சாஹோ படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.