’பிகில்’ விவகாரம்! - விஜய்க்கு ஆதரவு குரல் கொடுத்த பா.ஜ.க பிரமுகர்

விஜயின் ‘பிகில்’ படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அன்றைய தினமும், தீபாவளியன்றும் வெளியாகும் திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கவில்லை, என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும், அனுமதி இல்லாமல் சிறப்பு காட்சி திரையிடும் திரையரங்கங்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்கப்படும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இப்படி தெரிவித்தது விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கிய நிலையில், பிகில் படத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில், உதவி இயக்குநர் செல்வாவை, உரிமையியல் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். எனவே, செல்வா மீண்டும் வழக்கு தொடர்ந்து, அதன் முடிவு விஜய் படத்திற்கு எதிராக இருக்குமோ, என்றும் ரசிகர்கள் பயப்படுகிறார்கள்.
இந்த நிலையில், புதிய பிரச்சினையாக விஜய் பிகில் படத்தில் போட்டிருக்கும் காவி வேட்டி, சட்டை மற்றும் சிலுவையுடன் கூடிய உடையை ‘பிகில்’ உடை என்று விற்பனை செய்கிறார்கள். இதனை ஒருவர் சுட்டிக்காட்டி, ”நடிகர் ஜோசப் விஜய், தனது இந்து ரசிகர்களை கிறிஸ்தவர்களாக மாற்ற மிஷ்னரியிடம் இருந்து பணம் பெற்றிருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன” என்று பா.ஜ.க பிரமுகர்கள் எச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி.சேகரிடம் ட்விட்டரில் கேட்டார்.
இதற்கு பதில் அளித்திருக்கும் எஸ்.வி.சேகர், ”இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா.
விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா. Unity in diversity. WE CELEBRATE THIS.” என்று விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
விஜய்க்கு எதிராக மட்டுமே பா.ஜ.க பிரமுகர்கள் பேசி வந்த நிலையில், முதல் முறையாக எஸ்.வி.சேகர் அவருக்கு ஆதரவாக பேசியிருப்பதை விஜய் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.