நிறைய த்ரில், ஆச்சரியங்கள் நிறைந்த படமாக ‘பிளாக்மெயில்’ இருக்கும் - இயக்குநர் மு.மாறன் உறுதி

‘உங்களுடைய கதையை அடிப்படையாகக் கொண்டு…’ என்ற டேக்லைனுடன் ‘பிளாக்மெயில்’ படத்தின் டிரைலர் வெளியானபோதே ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’ போன்ற தரமான ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் மு. மாறன் அடுத்து ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘பிளாக்மெயில்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படம் குறித்தான அனுபவத்தை இயக்குநர் பகிர்ந்து கொண்டார்.
”மனிதகுல வரலாற்றில் பிளாக்மெயில் என்பது தவிர்க்க முடியாத, எழுதப்படாத நடைமுறை. சில நேரங்களில் இது நண்பர்களிடையே நகைச்சுவைக்காக செய்யப்படலாம். ஆனால், சில நேரங்களில் ஆழமான ரகசியங்கள் வெளிக்கொண்டு வரும் விதமாகவும், பல நேரங்களில் பிளாக்மெயில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைகிறது. ‘பிளாக்மெயில்’ படம் பல கதாபாத்திரங்களை சுற்றி நடக்கிறது. கதாநாயகன் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எப்படி சமாளிக்கிறான் என்பதுதான் கதை. நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் கொண்டிருக்கிறது. நிச்சயம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இந்தப் படத்தை நீங்கள் பார்க்கலாம்” என்றார் இயக்குநர் மு. மாறன்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றி பகிர்ந்து கொண்டதாவது, “உதவி இயக்குநர்கள் மற்றும் நல்ல கதைகள் இயக்கும் இயக்குநர்களுக்கு நம்பிக்கை கொடுப்பவர் ஜிவி பிரகாஷ்குமார் என்பதை அவரின் முந்திய படங்கள் சொல்லும். வித்தியாசமான கதை எனும்போது பலருக்கும் அவரின் பெயர்தான் முதலில் நினைவுக்கு வரும். அதுபோன்ற கதைகளை அவரும் மிஸ் செய்ய மாட்டார். அப்படித்தான் ஜிவி பிரகாஷ்குமார் இந்தக் கதையில் வந்தார். தேஜூ அஸ்வினி, ஸ்ரீகாந்த், பிந்து மாதவி மற்றும் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் கதை தொடங்கியதில் இருந்து முடியும் வரைக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொழில்நுட்பக் குழுவினர் பற்றி கூறுகையில், “தன்னுடைய பின்னணி இசையால் சாம் சி.எஸ். படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரது பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் ஆகி உள்ளது. டி. இமான் சாரின் டிராக்கும் படத்திற்கு பலம். கதைக்கு உயிர் கொடுத்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படம் எடுக்கும்போது பல சவால்கள் இருந்தபோதிலும் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி தரத்தில் எந்த சமரசமும் செய்யாத தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி” என்றார்.