’எல் ஜெகதம்மா 7B ஸ்டேட் ஃபர்ஸ்ட்’ (L Jagadamma 7B State First) திரைப்பட விமர்சனம்
Casting : Urvashi, Kalesh Ramanand, Kalesh Ramanand, Baiju V.K, ,Balachandran Chullikadu, Rajesh Sharma, Gibin Gopinath,Resmi Anil, Shailaja Ambu, Jayan Cherthala, Prajod Kalabhavan, Noby Marcose, PR Pradeep, Anjali Sathyanath
Directed By : Shivas
Music By : Kailas Menon
Produced By : Fossil Holdings, Urvashi
கேரள மாநிலத்தில் உள்ள, வளர்ச்சியடையாத கிராமம் ஒன்றில் வசித்து வரும் ஊர்வசி, சிறிய அளவிலான வட்டி தொழில், 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பெண்களை ஒருங்கிணைப்பது, சீரியல் மற்றும் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு துணை நடிகர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்ட பல வேலைகள் செய்து வருகிறார். திருமணம் ஆகாத அவருடன், சிறு வயதில் இருந்தே காலேஷ் ராமநாத், சகோதரனை போல் உடன் இருக்கிறார்.
7ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், கடின உழைப்பால் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் ஊர்வசி, தொழிலாளர்கள் சங்கத்தினரால் ஏற்படும் பிரச்சனையை தனது புத்திசாலித்தனத்தால் சுலபமாக முறியடிக்கிறார். இதனால் அவர் மீது கோபம் கொள்ளும் சங்கத்தினர், அவரை பழிவாங்கும் நோக்கில், அவரது கட்டுமான பணிக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இது குறித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊர்வசி முறையிடும் போது, பஞ்சாயத்து தலைவரின் முடிவு, தங்களால் எதுவும் செய்ய முடியாது, என்று அதிகாரிகள் மறுத்துவிடுகிறார்கள்.
இந்த நிலையில், பஞ்சாயத்து தலைவர் இறந்ததால் இடைத்தேர்தல் வருகிறது. வழக்கம் போல் அந்த கிராமத்தில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு பெரிய கட்சியினர் போட்டியிட தயாராகுகிறார்கள். மூன்றாவதாக ஊர்வசி சுயேட்சை வேட்பாளராக களம் இறங்குகிறார். பணம், அரசியல் அனுபவம் மிக்க இரண்டு வலிமை மிகுந்த வேட்பாளர்களை, தனது புத்திசாலித்தனம் மற்றும் பெண்கள் ஆதரவு மூலம் வீழ்த்தி வெற்றி பெறும் ஊர்வசி, பஞ்சாயத்து தலைவரானவுடன் பல்வேறு பணிகளை செய்ய முடிவு செய்கிறார்.
ஆனால், அரசியல்வாதிகள், தங்களது பண பலத்தால், அவரது செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டைப் போடுவதோடு, அவரது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக பெரும் சதி செய்கிறார்கள். அவற்றை முறியடித்து பஞ்சாயத்து தலைவராக ஊர்வசி சாதித்தாரா? இல்லையா ? என்பதை பெண்களின் வலிமையை பிறதிபலிக்கும் வகையில் சொல்வதே ’எல் ஜெகதம்மா 7B ஸ்டேட் ஃபர்ஸ்ட்’.
எளிமையான கதை சொல்லல், கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களம் ஆகியவற்றில் பிரதிபலிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றின் மூலம் பெரும் கவனம் ஈர்த்து வரும் மலையாள திரைப்படங்களின் வரிசையில், இந்த படமும் நிச்சயம் இடம் பிடிக்கும். ஒரு சாதாரண கதை என்றாலும், அதை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஒரு முழுமையான ஜனரஞ்சகமான படமாக மட்டும் இன்றி, தேசியப் பற்றை வளர்க்கும் ஒரு படைப்பாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சிவாஸ்.
கதையின் நாயகியாக ஜெகதம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஊர்வசி, வழக்கம் போல் தனது வெகுளித்தனம் கலந்த மேனரிசம் மூலம் சிரிக்க வைத்திருப்பதோடு, தனது புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் தேர்தல் களத்தை சாதாரணமாக எதிர்கொண்டு வெற்றி பெறும் காட்சிகள் மற்றும் அனைத்துவிதமான உணர்வுகளையும் தனது அளவான நடிப்பு மூலம் பாராட்டும்படி கையாண்டிருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே ஊர்வசியுடன் சகோதரனை போல் வலம் வரும் அன்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காலேஷ் ராமநாத், தனக்கான வேலையை சரியாக செய்து கவனம் பெறுகிறார்.
ஊர்வசியின் வீட்டுப் பணி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரேஷ்மி அனில், தேர்தல் வேட்பாளர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பைஜு.வி.கே, ஜிபின் கோபிநாத், அரசியல் கட்சி நிர்வாகிகளாக நடித்திருக்கும் பாலச்சந்திரன் ஜுல்லிகாடு, ராஜேஷ் சர்மா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் தேர்தல் களத்தில் பயணித்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அனில் நாயர், பரதுருத் என்ற கிராமத்தை எளிமையாக காட்சிப்படுத்தியிருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு அங்கு பயணித்த உணர்வை கொடுக்கிறார்.
கைலாஷ் மேனன் இசையில் பாடல்கள் கதைக்களத்தையும், ஜெகதம்மாவை பற்றி விவரிக்கும் வகையிலும், கேட்கும் வகையிலும் அமைந்துள்ளது. பின்னணி இசை கிராமத்து ஓசைகளோடு காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
ஷைஜாலின் படத்தொகுப்பு, ராஜேஷ் மேனனின் கலை ஆகியவையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சிவாஸ், ஜெகதம்மா என்ற பெண்னை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு கேரள அரசியலையும், தொழிலாளர்கள் உரிமை என்ற பெயரில் நடக்கும் மோசடிகளையும் நையாண்டி செய்திருப்பதோடு, கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றியும் அலசியிருக்கிறார். குறிப்பாக கேரள மாநிலத்தில் உள்ள வழிபாட்டு தளங்களுக்கு போதிய ரயில் பயண வசதி இல்லை என்பதை குறிப்பிட்டிருப்பவர், அதற்கான தீர்வு குறித்த யோசனையையும் ஜெகதம்மா கதாபாத்திரம் மூலம் சொல்லியிருக்கிறார்.
வட்டிக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட பல வேலைகள் செய்து பணம் சம்பாதிக்கும் ஜெகதம்மா யார்?, அவரது இளமை காலம் எப்படி இருந்தது ?, ஆகியவற்றை ஒரு பாடலின் மூலம் விவரித்திருக்கும் இயக்குநர் சிவாஸ், அவரது முன்னேற்றம் மற்றும் பிரச்சனைகளை அவர் கையாளும் விதத்தின் மூலம் பெண்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
எளிமையான கதை சொல்லல், பெரிய அளவிலான திருப்பங்கள் இல்லாத திரைக்கதை என்றாலும், சிறு சிறு விசயங்களை கூட சுவாரஸ்யமாக சொல்லி, ஜெகதம்மா என்ற ஒரு பெண், தன் வாழ்க்கை பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சாதாரணமாக கையாண்டு எப்படி அதை வெற்றி பயணமாக தொடர்கிறார், என்பதை அனைத்து தரப்பினரும் பாராட்டும் ஒரு திரைப்படமாக கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் சிவாஸ்.
ரேட்டிங் 3.8/5

