சிம்புவை ஆண்டியாக்கிய ‘அரசன்’! - ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

சிம்பு என்றாலே வம்பு, என்பதை மாற்றிய சிம்பு, சமீபகாலமாக நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்து வருவதோடு, ஏகப்பட்ட படங்களிலும் கமிட் ஆகி வருகிறார்.
இந்த நிலையில், அவரது ஏடாகூட நடவடிக்கையால், அவருக்கு சொந்தமான கார், மொபைல் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’அரசன்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆன சிம்பு, தற்போது அதே அரசன் படத்தினால் ஆண்டியாகும் நிலை உருவாகியுள்ளது.
பேஸன் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சிம்புவை வைத்து அரசன் என்ற படத்தை தயாரிக்க அவருடன் ஒப்பந்த செய்துக்கொண்டது. அதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசப்பட்டு அட்வாஸாக ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதாம். ஆனால், சிம்பு படத்தில் நடிக்காமல் இழுத்தடித்துக்கொண்டிருந்ததாக கூறும் தயாரிப்பு நிறுவனம், தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்ப பெருவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இரு தரப்பு வாதங்களையும் கேட்டு விட்டு, அரசன் படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் ரூ.50 லட்சத்தையும், அதற்கான வட்டி ரூ.35.50 லட்சத்துடன் சேர்த்து ரூ.85.50 லட்சமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நடிகர் சிம்பு திருப்பி கொடுக்க வேண்டும், என்று உத்தரவிட்டார். மேலும், இந்த தொகையை நான்கு வாரத்தில் சிம்பு செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் நடிகர் சிம்பு வீட்டில் உள்ள பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
மேலும், சிம்புவுக்கு சொந்தமான கார், மொபைப் போன்கள் ஆகியவற்றையும் ஜப்தி செய்யலாம் என்று நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.