Jun 04, 2020 09:37 AM

’மாஸ்டர்’ பட ரிலீஸால் வரப்போகும் ஆபத்து! - எச்சரிக்கும் தயாரிப்பாளர்

’மாஸ்டர்’ பட ரிலீஸால் வரப்போகும் ஆபத்து! - எச்சரிக்கும் தயாரிப்பாளர்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப பல மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும், ஒடிடி என்ற டிஜிட்டல் தளத்தின் மூலம் திரையரங்க தொழிலுக்கு புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திரையரங்கங்களை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்று திரையரங்க உரிமையாளர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதற்கிடையே, திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்பட்டால், விஜயின் ‘மாஸ்டர்’ படத்தை தான் முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. காரணம், விஜயின் ‘மாஸ்டர்’ படம் லீஸானால் திரையரங்கிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும், அதனால் பாதிக்கப்பட்ட தொழில் மீண்டும் புத்துயிர் பெரும் என்பது தான்.

 

இந்த நிலையில், திரையரங்கங்கள் திறக்கப்பட்டதும் முதல் படமாக விஜயின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆவதற்கு பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் மாஸ்டர் படம் வெளியானால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

 

Producer KR

 

இது குறித்து கூறிய கேயார், “சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், விஜயின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனால் கூட்டம் அதிகம் வரும், அதனால் கொரோனாவும் பரவும். அதே சமயம், அதிகமான கூட்டம் வரும் போது, திரையரங்க ஊழியர்களால் அரசின் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க முடியாது. எனவே, திரையரங்கங்கள் திறக்கப்பட்டால், சிறிய படங்களை முதலில் ரிலீஸ் செய்ய வேண்டும். அப்போது தான், திரையரங்கிற்கு வரும் மக்களிடம் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது எப்படி என்று எடுத்துறைக்க முடியும். அதே சமயம், சிறிய படங்கள் ரிலீஸ் ஆனதால் திரையரங்கங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்டும் நோக்கில் தமிழக அரசு ஜி.எஸ்.டி வரியை குறைக்கலாம். இப்படி மூன்று மாதங்கள் செய்துவிட்டு, மூன்று மாதங்களுக்கு பிறகு பெரிய படங்களை ரிலீஸ் செய்யலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்த காரணங்களால், ‘மாஸ்டர்’ படத்தை தற்போது ரிலீஸ் செய்ய அனுமதிக்க கூடாது, என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள தயாரிப்பாளர் கேயார், திரையரங்குகளில் ஏசி பயன்படுத்தக் கூடாது, என்று அரசு கட்டுப்பாடு விதிக்கும் என்றால், அதற்கு மாறாக தற்போது திரையரங்குகளை திறக்காமல் இருப்பதே நல்லது, என்றும் தெரிவித்துள்ளார்.