தீபாவளி ரேஸ்! - விஜயுடன் மோத தயாராகும் நடிகர்!

விஜயின் 62 வது படமான ‘சர்கார்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், அரசியல் கதையாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.
தற்போது படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்பதற்காக படக்குழுவினர் விறுவிறுப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
‘சர்கார்’ படத்துடன் அஜித்தின் ‘விஸ்வாசம்’ தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய காலதாமதாகும் என்பதால், சர்கார் தீபாவளி ரேஸில் இருந்து ஒதுங்கிக்கொண்டது. அதன் பிறகு சூர்யாவின் ‘என்.ஜி.கே’ படம் விஜயின் ‘சர்கார்’ படத்துடன் போட்டி போடும் என்ற நிலை உருவானது. ஆனால், இயக்குநர் செல்வராகவனுக்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் போனதால் ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ‘என்.ஜி.கே’ தீபாவளிக்கு வெளியாகாது, என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், சூர்யாவும், விஜயுடனான தீபாவளி ரேஸியில் இருந்து விலகிவிட்டார்.
இப்படி முன்னணி நடிகர்கள் விஜயுடனான தீபாவளி ரேஸில் இருந்து விலகிய நிலையில், விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ படம் விஜயின் ‘சர்கார்’ படத்தோடு தீபாவளி ரேஸில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் படத்துடன் போட்டி போட்டு ரிலீஸ் செய்தால், அதுவே படத்திற்கு விளம்பரமாக அமைந்துவிடும் என்று ‘திமிரு புடிச்சவன்’ படக்குழு நினைத்து இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.