Oct 29, 2018 06:48 PM

மீ டூ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குநர்! - பட விழாவில் பரபரப்பு

மீ டூ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குநர்! - பட விழாவில் பரபரப்பு

தினம் ஒரு நடிகை தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து பேசி வருவதால் தமிழ் சினிமாவில் மீ டூ-வினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், சில நடிகர்கள், இயக்குநர்கள் மீ டூ-வுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில், எஸ்.விஜயசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எவனும் புத்தனில்லை’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், மீ டு-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நிகழ்ச்சியில் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இது என்ன மீ டூ.? ஏ டூ பி டூ?  இங்கே என்ன மாதிரியான நிலைப்பாடு என்றே புரியவில்லை.

 

ஒரு ஆணும் இன்னொரு ஆணும் உடலுறவு கொள்வதும், ஒரு பெண்ணும் இன்னொரு பெண்ணும் உறவு கொள்ளவும் அனுமதி கொடுக்கிறது சட்டம். ஒரு ஆண், ஒரு பெண் உறவு கொள்வது தவறு என்கிறது.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கவரப்பட்டு உறவு கொள்வது எப்படி தவறாகும். அப்படி கவரப்படாமல் போனால் பிறப்பு என்கிற லிங்கே விடுபட்டு போகும்.

 

இது போல் பிரச்சனை வராமல் இருக்கவே நான் படப்பிடிப்பு ஆரம்பித்த உடனேயே ஹீரோயின்களை திட்டியும் அடித்தும் விடுவேன், அதற்கு பிறகு எப்படி என்கிட்டே நெருங்குவார்கள்.

 

என் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த், கார்த்திக் எல்லோருமே கட்சி ஆரம்பித்து விட்டார்கள், எனக்கு அப்படி ஒரு ராசியோ என்னவோ?

 

சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்க வில்லை என்று புகார் சொல்லும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தரமான படங்களாக எடுங்கள், மக்கள் ரசிக்கிற மாதிரி படங்களை எடுங்கள், தியேட்டர் தருவார்கள்.

 

நான் வரி விலக்குக்காக பல படங்களை பார்த்திருக்கிறேன். அதில் பெரும்பாலான படங்கள் குப்பையோ குப்பை. அப்படி ஒரு படத்தை எவன் காசு கொடுத்து பார்ப்பான், .அப்புறம் எப்படி தியேட்டர் கிடைக்கும்.

 

இந்த பத்திரிகைகாரங்க பாவம், எவ்வளவு குப்பை படமாக இருந்தாலும் இரண்டரை மணி நேரம் உட்கார்ந்து தண்டணையை அனுபவித்தே வருகிறார்கள். படம் ஆரம்பித்த உடனேயே டைரக்டர் வெளியே வந்து விடுகிறார்.

 

பத்திரிக்கையாளர்களும் இந்த சீனுக்கு அடுத்த சீனும் நல்லா இருக்கும். பாராட்டி எழுதுவோமே என்று கடைசி வரை பார்த்து விடுகிறார்கள். பத்திரிக்கையாளர்களை பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.

 

விழாவில் இயக்குநர் தளபதி நடிகர்கள் நபி நந்தி, சரத், சுவாசிகா, எலிசபெத், சுப்புராஜ், இயக்குநர் எஸ்.விஜயசேகரன், இசையமைப்பாளர் மரியா மனோகர் ஆகியோர் பேசினார்கள். a