Mar 12, 2021 06:21 AM

சாதியை ஒழிப்பது எப்படி? - பட விழாவில் யோசனை சொன்ன இயக்குநர் சுப்பிரமணிய சிவா

சாதியை ஒழிப்பது எப்படி? - பட விழாவில் யோசனை சொன்ன இயக்குநர் சுப்பிரமணிய சிவா

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தெலுங்கு திரைப்படம் ’போலீஸ்காரன் மகள்’ என்ற தலைப்பில் தமிழில் வெளியாகிறது.

 

தெலுங்கியில் இப்படத்தை தயாரித்த கொண்டையா தனது கொண்டையா மூவி மேக்கர்ஸ் சார்பில் தமிழிலும் தயாரிக்கிறார். இப்படத்திற்கு வசனம் எழுதி ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழாக்கம் செய்துள்ளார். சுனில் காஷ்யப் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை சங்கர் நீதிமாணிக்கம், முருகானந்தம், ஆவடி சே.வரலட்சுமி, வலங்கைமான் நூர்தீன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

 

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் அரவிந்த்ராஜ், சுப்பிரமணிய சிவா, ரவி, பி.ஆர்.ஓ சங்க செயலாளர் பெருதுளசி பழனிவேல், படத்தின் தயாரிப்பாளர் கொண்டையா, ஏ.ஆர்.கே.ராஜராஜா ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சுப்பிரமணிய சிவா, “சாதி, மதம், இனம் போன்றவை தான் ஆணவப்படுகொலைகளுக்கான முக்கியமான காரணம். அதே சமயம், பொருளாதாரத்தில் ஏற்றம் பெற்று விட்டால் இந்த சாதி பாகுபாடு என்பது இல்லாமல் போய்விடும். ஆனால், திரைப்படங்களில் மட்டும் காதலில் சமநிலையை சொல்லாமல், ஒரு ஏற்றத்தாழ்வோடு தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணக்காரர் ஏழை வீட்டு பெண்ணை காதலிப்பது, சாதாரண சாதியினர் மேல் சாதி என்று சொல்ல கூடியவருடன் காதல், என்று சினிமாவில் இந்த விவகாரம் வளர்ந்துக்கொண்டே போகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும், இப்படி சாதி சம்மந்தமான படம் எடுப்பவர்களில் எத்தனை பேர் சாதி பாகுபாடுக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள், என்பது தான் பிரச்சனை. சாதி இல்லை என்று திரைப்படத்தில் சொல்பவர்கள், தங்களது சொந்த வாழ்க்கையில் அந்த கொள்ளையை கடைபிடிப்பதில்லை. ரசிகர்களும் அப்படித்தான், இப்படிப்பட்ட திரைப்படங்களை ரசிப்பார்கள், ஆனால் வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் தான் இந்த பிரச்சனை முடியாமல் வளர்ந்து கொண்டே போகிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், பொருளாதார முன்னேற்றம் மிக முக்கியம். தனி மனிதன் தனது பொருளாதாரத்தை உயர்த்திக் கொண்டால் சாதி, மதம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். எனவே, தனி மனித முன்னேற்றம் தான் இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாகும்.” என்றார்.

 

 

இயக்குநர் அரவிந்த்ராஜ் பேசுகையில், “ஆணவப்படுகொலைகள் பற்றி நிறைய படங்கள் வர  தொடங்கிடுச்சு. நண்பர் சுப்பிரமணிய சிவா சொன்னது போல, இப்படி ஒன்று நம்ப வீட்டில் நடந்தால் எப்படி இருக்கும், என்று நான் அடிக்கடி யோசிப்பேன். நல்லவேலை அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால், அப்படி நடந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று காதல் திருமணம் ரொம்ப சாதாரணமாக ஆகிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில், மகள் அல்லது மகன் என இருவரிடமும், யாரையாவது காதலிக்கிறீர்களா, என்று அவர்களிடம் கேட்ட பிறகு தான் திருமண ஏற்பாடு செய்கிறார்கள், அந்த அளவுக்கு காதல் திருமணத்தை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அதுபோல, சாதி பிரச்சனையும் காலப்போக்கில் மாறிவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதனால், இப்படி ஒரு படம் எடுத்திருக்கும் குழுவினருக்கு என் வாழ்த்துகள். பாடல்களும், டிரைலரும் நன்றாக இருக்கிறது. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் தமிழில் அதை விட பெரிய வெற்றியை பெறும்.” என்றார்.

 

இயக்குநர் ஏ.ஆர்.கே.ராஜராஜா பேசுகையில், “தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்வதற்கு நடிகை கெளதமி மேடம் தான் காரணம். ஆந்திராவில் இந்த படத்திற்கு சென்சார் கிடைக்கவில்லை. அதனால் தயாரிப்பாளர் ரிவைசிங் கமிட்டியை நாடினார். அதனால் இந்த படம் சென்னையில் சென்சார் செய்யப்பட்ட போது நடிகை கெளதமி மேடம் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டியதோடு, தமிழில் வெளியிடுமாறும் தயாரிப்பாளர் கொண்டையாவிடம் கூறினார். அதன் பிறகு தான் அவர் என்னை அனுகி தமிழில் மொழிமாற்றம் செய்தார்.” என்று தெரிவித்தவர், டப்பிங் படங்களுக்கு பாடல் எழுதி வரும் பாடலாசிரியர்களுக்கு நேரடி தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுத வாய்ப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மற்ற சிறப்பு விருந்தினர்களும் படம் மற்றும் டிரைலர் குறித்து வெகுவாக பாராட்டி பேசியதோடு, படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.