Aug 29, 2018 06:53 AM

பிரபல பாலிவுட் இயக்குநர் தயாரிக்கும் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம்!

பிரபல பாலிவுட் இயக்குநர் தயாரிக்கும் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற மக்கள் புரட்சியான மெரினா புரட்சியை மையமாக வைத்து ‘ஜல்லிக்கட்டு’ என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.

 

சந்தோஷ் என்பவர் இயக்கும் இப்படத்தை அகிம்சா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நிருபமா தயாரிக்க, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் பொருப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

 

Director Anurag Kashyap

 

தலைவன் இல்லாமல் தன்னெழுச்சியாக உருவான அந்த போராட்டம் உலகம் முழுமையும் தன் வசப்படுத்தியது அனைவரும் அறிந்தது. அந்த மெரினா புரட்சியை மையப்படுத்தி இயக்குநர் சந்தோஷ் புதிய கோணத்தில் ஒரு கதை களத்தை உருவாக்கி இயக்கி இருக்கிறார். உலகம் முழுவதுமான மக்கள் எப்படி ஒரு புள்ளியில் இணைந்தார்கள் என்பதை புதிய வடிவத்தில் உருவாக்கி இருப்பதாக கூறுகிறார் இயக்குநர்.

 

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் நேரடி தொடர்பு  இல்லாத ஒரு விஷயத்திற்காக ஒன்றிணைந்து போராடியது எப்படி என்பதை கூறும் படமாக இது அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் நிருபமா. 

 

அமெரிக்காவின் ஹாவேர்ட் பல்கலைக்கழகத்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் ஜல்லிக்கட்டு. கென்யாவின் மசாய்மாரா எனும் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த பகுதியில் வாழும் காளை இனமும் நமது ஜல்லிக்கட்டு காளை இனமும் ஒரே இனம் என்பதை டி.என்.ஏ பரிசோதனைகள் நிரூபித்துள்ளன எனும் ஆச்சர்ய தகவலை சொல்லி கென்யாவின் படப்பிடிப்பிற்காண காரணத்தை விளக்குகிறார் இயக்குநர்.

 

கென்யாவின் மசாய்மாரா பகுதியில் பழங்குடி மக்களின் வாழ்வியலோடு படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் ஜல்லிக்கட்டு. படத்தில் மசாய்மாரா படப்பிடிப்பு காட்சிகள் ரசிகர்களுக்கு பெரு விருந்தாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர். உலகின் எல்லா பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட நிகழ்வுகளோடு மெரினாவின் உண்மைக் சம்பவங்களும் படத்தில் உள்ளன. உண்மைச்ச்சம்பவங்களின் காட்சிகளை சேகரிக்கும் பணியில் தொடக்கி கதைக்கான புதிய காலத்தை அமைப்பது என இயக்குநர் கடினமாக உழைத்து வெற்றிக்காக காத்திருக்கிறார்.

 

முற்றிலும் புதிய முகங்களோடு இயக்குநர் சந்தோஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ரமேஷ் வினாயகம் இசையக்கிறார். 

 

முதல் பாடல் யு.என் தலைமையகம், ஜப்பான், சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடைசி கட்ட பணிகளில் மும்முரமாக உள்ளது படக்குழு. 

 

விரைவில் திரைக்கு வரும் ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் பெற்ற மாபெரும்  வெற்றியை வெள்ளித்திரையிலும்  நிச்சயம் பெரும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் சந்தோஷ்.