‘பரியேறும் பெருமாள்’ குறித்து விசாரித்த பாலிவுட் பிரபலம்! - காரணம் இவர் தான்

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘பரியேறும் பெருமாள்’ மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், போதிய திரையரங்குகள் கிடைக்காததால் வசூல் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, படத்திற்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்துவிட்டு தற்போது கூடுதல் திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டு வருகிறதாம்.
இந்த நிலையில், ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலர் பேசி வருகிறார்கள். எந்த மாதிரியான படம், மும்பையில் படம் ஓடுகிறதா? என்று ட்விட்டரில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் விசாரித்துள்ளார். இதற்கு காரணம், கோலிவுட்டின் பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் தான்.
’பரியேறும் பெருமாள்’ படத்தை கோலிவுட் இயக்குநர்கள் பலர் பாராட்டி வந்தாலும், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒருபடி மேலே சென்று அப்படத்தை விளம்பரப்படுத்துவதில் தீவிரமாக இறங்கியுள்ளார். படத்தின் போஸ்டரை தனது டிபியாக வைத்திருக்கும் விக்னேஷ் சிவன், ட்விட்டர், “டியர் ஆமீர் கான், அமிதாப் பச்சன், தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தை நாங்கள் தமிழகத்தில் விரைவில் பார்த்து ரசிக்க உள்ளோம். மனிதநேயம் மற்றும் மாறாத ஏற்றத்தாழ்வு பற்றி பேசும் பரியேறும் பெருமாள் படத்தை பார்த்து, ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.” என்று பதிவிட்டார்.
அவரது இந்த பதிவை பார்த்த இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், ”இது என்ன படம், மும்பையில் சப்டைட்டிலுடன் ஓடுகிறதா?” என்று கேட்டார்.
மும்பை அரோரா திரையரங்கில் சப்-டைட்டிலுடன் திரையிடப்படுகிறது என்று அனுராக் கஷ்யப்புக்கு பதில் பா. ரஞ்சித் பதில் அளிக்க, விக்னேஷ் சிவனோ, “இல்லை என்றால் அங்கு ஷோவுக்கு ஏற்பாடு செய்யட்டுமா? தயவு செய்து கூறுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இப்படி ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்காக விக்னேஷ் சிவன் ஆதரவு தெரிவிப்பதை பார்த்து, ரசிகர்கல் அவரை பாராட்டி வருகிறார்கள்.