பிரபல நாடக கலைஞரும், நடிகருமான சீனு மோகன் மரணம்!

பிரபல மேடை நாடக நடிகரும், தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகருமான சீனு மோகன் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62.
கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் நடித்து வரும் சீனு மோகன், ‘வருஷம் பதினாறு’, ‘அஞ்சலி’, ‘தளபதி’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நிலையில், 2001 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். கிரேஸி மோகன், மாது பாலாஜி ஆகியோரது மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானவர், பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தவர், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி விஜய் சேதுபதியின் ‘இறைவி’, ‘ஆண்டவன் கட்டளை’, தனுஷின் ‘வட சென்னை’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, ‘கோலமாவு கோகிலா’ ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், இன்று திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் சீனு மோகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
நடிகர் சீனு மோகனின் இறப்புக்கு நாடக கலைஞர்களும், திரைப்பட நடிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.