May 03, 2022 04:17 AM

நடிகை ஜனனி ஐயர் வாழ்க்கையில் கடவுள் நடத்திய அதிசயம்

நடிகை ஜனனி ஐயர் வாழ்க்கையில் கடவுள் நடத்திய அதிசயம்

மத்திய அரசின் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே துறையும், தனியார் நிறுவனங்களும் இணைந்து பிரத்யேக சுற்றுலா ரயில்களை இயக்க இருக்கிறது. இதன் முதல்கட்டமாக கோவையில் இருந்து ஷீரடிக்கு நான்கு நாட்கள் குடும்ப ஆன்மீக சுற்றுலாப் பயணம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ஐ.ஆர்.டி.எஸ் ஹரிகிஷ்ணன், உமேஷ் நடிகை ஜனனி ஐயர் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள். 

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஜனரி ஐயர், “இந்த அனுபவத்தைப் பற்றி என் வார்த்தைகளை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு சில அதிசயங்கள் நடந்தால் தான் பதில் கிடைக்கிறது. நான் 10 நாட்களுக்கு முன் தான் சாய் பாபாவை பற்றிய ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தேன். திடீரென தர்மா போன் செய்து ஷீரடி ரயில் ஒன்றிற்கு விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது என்றார். எனக்கு இப்போது அதை சொல்லும்போது கூட புல்லரிகின்றது சாயிபாபாவின் இருப்பை உணர்ந்தேன். அதனால் தான் இந்த விளம்பரப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்துள்ளது. நானும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டேன். இதை இயக்குநர் ஜெய்குமார் இயக்கியுள்ளார். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருடன் வேலை பார்த்திருக்கிறேன். மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நீங்கள் பார்த்தது போல் இந்த ரயிலில் அனைத்து சிறப்பு வசதிகளும் உள்ளன. நானும் இந்த ரயிலில் பயணம் செய்து ஷீரடி செல்ல செல்லப் போகிறேன். அது நடக்கிறதா என்று பார்ப்போம். நீங்களும் இந்த ரயிலில் பயணம் செய்து அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

ஹரிகிருஷ்ணன், IRTS பேசுகையில், “இரயில்வேயில் மொத்தம் 4 வகையான சேவைகள் உள்ளன. அதில் முதன்மையானது ஐஆர்டிஎஸ் ஆகும். ரயில்வே துறையில் ஐஏஎஸ் என யாரும் இல்லை. ரயில்வே துறையை கட்டுப்படுத்துபவர் ஐஆர்டிஎஸ். இரயில்வே துறை இரண்டு வகைகளில் ஒன்று இயக்கம், மற்றொன்று வணிகம். நான் சேலம் கோட்டா பொறுப்பாளராக இருக்கிறேன், ஊட்டி வரை 15 மாவட்டங்கள் மற்றும் 99 ரயில் நிலையங்கள் என் கட்டுப்பாட்டில் இருந்தன. என்னைப் போலவே 67 மூத்த டிசிஎம்கள் இந்தியாவின் மொத்த வணிகத்தின் பொறுப்பாளர்களாக உள்ளனர். இந்தியாவில் 600+ மாவட்டங்கள் உள்ளன. ஆனால், அவர்கள் அதை இரண்டு இலக்க எண் 67 பாகமாக மட்டுமே பிரித்துள்ளனர். அவர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். 

 

கொரோனா இந்திய ரயில்வே மற்றும் இந்திய சுற்றுலா இரண்டையும் பாதித்துள்ளது. பின்னர், சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக 23 நவம்பர் 2021 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் "பாரத தேசத்திலுள்ள பழமை வாய்ந்த மற்றும் பெருமைவாய்ந்த சுற்றுலா தளங்களை இணைப்பதற்கு தனியார் பொறுப்புடன் யார் வேண்டுமானாலும் வந்து கலந்து கொள்ளலாம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படியென்றால், இதற்கு முன் இந்த சுற்றுலா தளங்களை இணைக்கவில்லையா என்று கேட்டால், இதற்கு முன்பும் இணைக்கப்பட்டிருந்தது. அதை இணைத்தது ஐஆர்சிடிசி. 

 

ஐஆர்சிடிசி என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, நாம் முன்பதிவு செய்வதற்கு ஐஆர்சிடிசி செயலியையோ அல்லது இணையத்தளத்தையோ தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆனால், எப்போதும் காத்திருப்பு பட்டியல் என்பது குறையாமலே இருக்கும். ஏனென்றால், அதிகபடியான தேவை இங்குள்ளது. அதற்கு ரயில்வேவும் ஈடு குடுக்க வேண்டியுள்ள காரணத்தால். தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றலாம் என்ற முடிவு எடுக்கப்படுகிறது.  இந்திய ரயில்வேயில் மொத்தம் 18 பிரிவுகள் உள்ளன. ஆனால், 7 தனியார் நிறுவனங்கள் தென்னிந்தியாவில் மட்டுமே பதிவு செய்துள்ளன. அவர்களில் நான்கு பேர் என் பகுதியில் வந்தவர்கள். அந்த நான்கில் இருந்து இந்த நிறுவனம் தான் முதலில் தொடங்க முயற்சி எடுத்துள்ளது. அதுவும் இவர்கள் தேர்வு செய்த வழித்தடம் மிகவும் அதி முக்கியமான ஒன்று. ஷீரடி வழித்தடத்தை தான் இவர்கள் தேர்வு செய்துள்ளனர். இதற்கு முன்னதாக வாராந்திர ரயில் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. அது சென்னை-ஷீரடி. ஆனால், அதற்கு முன் அவர்கள் இந்த தடத்தை பதிவு செய்துள்ளனர். 

 

ஜனனி ஐயர் கேட்டதுபோல், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, கடவுள் இருக்கிறார் என்பது தான் பதில். அவர் தான் நம்மை இங்கு இணைத்துள்ளார். ஷீரடிக்கு பலர் வெவ்வேறு இடங்களில் இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு நேரடி ரயில்கள் இல்லை. ஒன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்ல வேண்டும் அல்லது இணைப்பு ரயில்களுக்காக பெங்களூரு செல்ல வேண்டும்.  கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் அனைத்தையும் கொங்கு மண்டலம் என குறிப்பிடுவோம். இந்த கொங்கு மண்டலத்தை இணைப்பதற்காக இவர்கள் இந்த வழித்தடத்தை தேர்வு செய்துள்ளார். இது சுற்றுலா தளத்தை இணைப்பதற்கான ஒரு திட்டம் என்பதால். இந்த ரயில் மந்திராலயம் வழியாக செல்லும். மக்கள் மந்திராலயம் ராகவேந்திரா சுவாமி கோவிலை தரிசிப்பதற்காகவே இந்த வழி.

 

இந்த ரயிலின் சிறப்பு என்னவென்றால், முன்பதிவு ஐஆர்சிடிசியால் கட்டுப்படுத்தப்படவில்லை. டிக்கெட்டுகளைப் பெற, அவர்களிடமிருந்து நேரடியாகப் பெற வேண்டும். முக்கியமான ஒன்று இந்தியாவிலேயே தனியார் உதவியுடன் ரயில்களை இயக்கும் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தான் 7 நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்தனர். அதிலும், தமிழகத்தில் இருந்து இவர்கள் முதல் ரயிலை இயக்குவது தமிழ்நாட்டிற்கே பெருமை தரும் ஒரு விஷயமாக அமைந்துள்ளது.

 

இவ்வளவு பெரிய விஷயத்தை செய்வது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும். இது போன்று அடிக்கடி ரயில்வே குழு சந்திப்பிற்காக கூடுவார்கள். அப்போது, நான் தான் அவர்களின் சந்திப்பிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வேன். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை செய்து நம் அனைவரையும் இங்கு ஒன்றாக இணைத்திருக்கும் பாலாவிற்கு நான் கண்டிப்பாக நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் தான் இங்கு ஹீரோ. 

 

ஜனனி ஐயர், நீங்கள் நடித்திருக்கும் இந்த விளம்பரப்படம் மிகச் சிறப்பாக உள்ளது. இயக்குனர் இதை அழகாக இயக்கியிருக்கிறார். தெகிடி படம் பார்த்தேன். அதில் மிக அழகாக நடித்திருந்தார் ஜனனி ஐயர். தெகிடி என்றால் என்ன அர்த்தம் என எனக்கு அப்போது தெரியாது. தெகிடி என்றால் பகடை என்று அர்த்தம். அதே போல் அவன்-இவன் படம் எதுகை மோனையோடு அமைந்த ஒரு படம். அந்த படத்திலும் மிக சிறப்பாக நடித்திருந்தார். இப்போது எடுக்கப்பட்ட இந்த விளம்பர படத்திலும் அழகாக நடித்திருக்கிறர் ஜனனி ஐயர். இந்த விளம்பரப் படம் நம்மை ரயிலுக்குள் கூட்டி செல்வது போல் அமைந்திருக்கிறது.

 

வருகின்ற மே 17ம் தேதி அன்று இந்த ரயிலை இயக்க முடிவு செய்துள்ளனர். செவ்வாய்க் கிழமை இங்கு புறப்பட்டு, புதன் கிழமை மாலை அங்கு சென்றடையும். வியாழக்கிழமை அன்று பாபாவுக்கு உகந்த நாள் என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. ஆகையால், தரிசனம் முடித்த பின் வியாழக்கிழமை அன்று மாலை புறப்பட்டு வெள்ளிக்கிழமை இங்கு வந்தடைவது போல் தான் பயணம் இருக்கும். இந்த குறுகிய காலத்தில் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாட்டை செய்தது மிகவும் கடினம். அதை செய்து முடித்திருக்கும் உமேஷ் அவர்களுக்கும் மற்ற குழு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். ஏனென்றால், அவர்களால் ரயில்வேக்கு பெருமை ரயில்வேயால் அவர்களுக்கு பெருமை. இது பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரு வழியாக இருக்கும் திட்டம். இதை மக்கள் அனைவரும் சரிவர பயன்படுத்த வேண்டுமென ரயில்வே துறை சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

Sai Sadan Xpress Launch

 

உமேஷ் சிஇஓ பேசுகையில், “செய்தியாளர்கள், செல்வி.ஜனனி ஐயர், ஹரிகிருஷ்ணன் மற்றும் இந்த செய்திக்குறிப்பு மற்றும் சந்திப்புக்கு காரணமான எனது அன்பான தோழர்கள் ஆகிய உங்களை சந்திக்க ஒரு அற்புதமான மாலை இது. நாம் பயணித்த இந்த சில ஆண்டுகளில் மிகவும் சிரமப்பட்டும் கடுமையாக உழைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். ஆனால், இன்னும் ஒன்றை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ஜனவரி மாதம் நான் பாபாவை தரிசிக்க என் குடும்பத்துடன் ஷீரடி சென்றேன். எனது நிறுவனம் மூலம் பாபாவின் பக்தர்களை அவருடைய இடத்திற்கு அழைத்துச் செல்வேன் என்று நான் அப்போது நினைக்கவில்லை. இதற்கு மேல் பாபாவின் ஆசிர்வாதம் எப்படி கிடைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இது எங்களுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு, பத்திரிகை, ஊடகங்கள் அனைவரும் இந்த ரயிலை பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்வீர்கள் என்று நம்புகிறோம். மிஸ்டர் ஹரிகிருஷ்ணா கூறியது போல் பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் முதல் ரயில் எங்கள் ரயில் என்பது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம். பாலா மூலம் நீங்கள் அனைவரும் இங்கே இருக்கிறீர்கள் என்பதற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 

நாம் அனைவரும் ஒரு சார்ட்டெட் விமானம் வேண்டும் என்று நினைத்திருப்போம். ஆனால், சார்ட்டெட் ரயில் முற்றிலும் வேறு விதமான ஒன்று. ஹரிகிரிஷ்ணா அவர்கள் விவரமாக அனைத்தையும் உங்களுக்கு விளக்கிவிட்டார். இந்த ரயில் எப்படி இயங்கும், இந்த ரயிலின் வழித்தடம் என அனைத்தையும் தெளிவாக விளக்கிவிட்டார். பத்திரிகையாளர் அனைவரும் இந்த ஷீரடி சாய்பாபா சாய் சதன் எக்ஸ்பிரஸ் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள். பாபாவின் அருளுடன் நாம் கண்டிப்பாக வெற்றியடைவோம்.மென்மேலும் பல வழித்தடங்களில் ரயில் சேவையை துவங்குவோம் நன்றி.” என்றார்.