Sep 18, 2018 07:55 AM

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு கைலி இலவசம்! - தயாரிப்பாளரின் பலே ஐடியா

ஒரு டிக்கெட்டுக்கு ஒரு கைலி இலவசம்! - தயாரிப்பாளரின் பலே ஐடியா

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போதைய காலக்கட்டத்தில் நல்லப் படம் எடுத்தாலும், ரசிகர்களை தியேட்டருக்கு வர வைக்க, அல்லது அப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பல்வேறு யுக்திகளை கையாள வேண்டிய நிலையே உள்ளது. படம் தயாரிக்க குறிப்பிட்ட பட்ஜெட் ஒதுக்குவது போல, படத்தின் விளம்பரத்திற்கும் கணிசமான தொகையை பல தயாரிப்பாளர்கள் ஒதுக்கி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை பார்க்க மக்களை திரையரங்கிற்கு வரவைக்கும் நோக்கில் புது ஐடியா ஒன்றை செயல்படுத்த உள்ளார். அதாவது, தனது படத்தின் டிக்கெட் ஒன்றுக்கு ஒரு விலை உயர்ந்த கைலியை பரிசாக வழங்க இருக்கிறாராம்.

 

ராணா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புதுமுக நடிகர்கள் சாமி, திவாகர், அஞ்சு ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘களவாணி சிறுக்கி’.

 

வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ரிலிஸாக உள்ள இப்படத்தின் தயாரிப்பாளர் மக்களை தியேட்டருக்கு வரவைக்க புது யுக்தி ஒன்றை கையாளப்போகிறார். அதாவது, படம் வெளியாகும் 5,6,7 ஆகிய தேதிகளில், காலை காட்சிக்கு மட்டும், தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு ஒரு டிக்கெட்டுக்கு ஒரு விலை உயர்ந்த 143 பிராண்ட் கைலி ஒன்றை பரிசாக வழங்கப் போகிறாராம். இதன் மூலம் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள், படமும் வெற்றிப் பெறும் என்கிறார் தயாரிப்பாளர் ஆர்.நமச்சிவாயம்.

 

ரவி ராகுல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழகம் முழுவதும் ட்ரீம் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.