Dec 14, 2018 04:54 AM

’சீதக்காதி’ படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பல விஷயங்கள் இருக்கும்! - விஜய் சேதுபதி

’சீதக்காதி’ படத்தில் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பல விஷயங்கள் இருக்கும்! - விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்கராக மட்டும் இன்றி வசூல் நடிகராகவும் வலம் வரும் விஜய் சேதுபதியின் 25 வது படமான ‘சீதக்காதி’ வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் சேதுபதி, இப்படத்தின் மூலம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அறியாத பல விஷயங்கள் இப்படத்தில் இருப்பதாக, விஜய் சேதுபதி சொல்லியிருக்கிறார்.

 

இப்படத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட மேடை நாடக கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த 20 பேரை தேர்வு செய்வதற்காக இயக்குநர் பாலாஜி தரணிதரன், 300 க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்களிடம் ஆடிஷன் நடத்தியிருக்கிறார். இப்படி பல சோதனைகளை கடந்து இப்படத்தின் மூலம் சினிமா நடிகர்களாகியிருக்கும் நாடக கலைஞர்களை கெளரவிக்கும் விதத்தில் சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு படக்குழு ஏற்பாடு செய்திருந்தது. அதில், நாடக கலைஞர்களை மேடை ஏற்றி, அவர்களை கெளரவப்படுத்தியது.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, ”என் 25வது படமாக எதை பண்ணலாம் என எந்த ஒரு சிந்தனையும் எனக்குள் இல்லை. அந்த நேரத்தில் தான் இந்த படம் எனக்கு அமைந்தது. இந்த கதையை நம்பிய தயாரிப்பாளர்களான மும்மூர்த்திகள் சுதன், உமேஷ், ஜெயராம் ஆகியோருக்கு நன்றி. இந்த கதை அனைவரையும் ஈர்க்கும், எதிர்பாராத விஷயங்கள் இருக்கும்.” என்றார்.

 

Balaji Tharanitharan

 

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், “இந்த படத்தை உருவாக்கும் போது நான் மிகவும் மகிழ்ந்த விஷயம் நாடக கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது தான். எல்லோரும் மிகவும் திறமைசாலிகள். அவர்கள் இந்த படத்தில் நடித்த அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த கதையை நான் எழுதி 5 வருடம் இருக்கும், கதையை புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் கிடைத்தது மிகப்பெரிய வரம். விஜய் சேதுபதியை என்னால் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நினைத்து பார்க்கவே இல்லை. கடைசியில் அவரிடம் தான் போய் நின்றேன், அவர் கதாபாத்திரமாகவே உருமாறி நின்றார். சீதக்காதி தான் என்னுடைய சிறந்த படம் என்று சொல்வேன். மௌலி, அர்ச்சனா, மகேந்திரன் ஆகியோருடன் நாடக கலைஞர்கள் அனைவரும் இந்த படத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்கள். லைவ் சவுண்டில் வேலை பார்த்தது மிகப்பெரிய அனுபவம்.” என்றார்.

 

Seethakaathi

 

பேஸ்ஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் முழுக்க முழுக்க லைவ் சவுண்ட் ரெக்கார்டிங் முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்பத்தில் சில தமிழ்ப் படங்கள் வெளியாகியிருந்தாலும், அவை ஒரு சோதனை முயற்சியாகவும், சில பகுதிகள் லைவாகவும், சில பகுதிகள் டப்பிங்கும் செய்யப்பட்டவைகளாகவே இருந்துள்ளன. ஆனால், ஒரு சிறு வசனம் கூட டப்பிங் செய்யப்படாமல் முழுக்க முழுக்க லைவ் சவுண்ட் ரெக்கார்டிங்கிலேயே படமாக்கப்பட்ட படம் என்றால் அது ‘சீதக்காதி’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.