Mar 31, 2021 01:14 PM

புதுமுகங்களின் புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் ‘வரிசி’

புதுமுகங்களின் புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் ‘வரிசி’

முயற்சி படைப்பகம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வரிசி’. அறிமுக இயக்குநர் கார்த்திக் தாஸ் எழுதி இயக்கியிருப்பதோடு, இப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். சப்னா தாஸ் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இப்படத்தில் கிருஷ்ணா, துஷாரா, ஆவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, அனுப்பமாகுமார், கணேஷ், பாலாஜி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இது தான் முதல் திரைப்படமாகும்.

 

புதியவர்களாக இருந்தாலும், புதிய முயற்சியாக, வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘வரிசி’ காதல், நட்பு, நகைச்சுவை, திகில் என அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை அழுத்தமாக பேசும் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.

 

நந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு உமாரமணன் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள, சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிகையாளர் ‘தேவி’ மணி கலந்துக் கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் படத்தின் நாயகனுமான கார்த்திக் தாஸ், “’வரிசி’ படம் இந்த ஒரு நிலைக்கு வருவதற்கு நான் மட்டும் காரணம் அல்ல, மேடையில் இருப்பவர்களுடம், மேடையில் ஏராத பலரும் தான் காரணம். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணிய என்னைப் போன்றவர்களின் உழைப்பால் தான் இந்த படம் உருவாகியுள்ளது. நான் படத்தை இயக்கி நடித்திருப்பதோடு, படத்தின் பல பணிகளை செய்திருக்கிறேன். அதுபோல் தான் என் குழுவினரும் பல வேலைகளை செய்திருக்கிறார்கள். சினிமாவைப் பற்றி முழுமையாக எங்களுக்கு தெரியும், என்று நான் சொல்லவில்லை. வாய்ப்பு கொடுத்தால் கற்றுக்கொண்டு சிறப்பாக செய்வோம், என்றே சொல்வேன். சினிமாவுக்கான பல வருடங்கள் நான் அலைந்திருக்கிறேன். அதில் இருந்து தான் சினிமாவை நான் கற்றுக் கொண்டேன். இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நல்ல படமாக இருக்கும். வித்தியாசமான திரைக்கதை அமைப்பும், விறுவிறுப்பான காட்சிகளுடன் இருக்கும் வரிசி ரசிகர்களை ஏமாற்றது, என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன். மறுபடியும் சொல்கிறேன், எனக்கு வாய்ப்பு கொடுங்கள் ‘வரிசி’ போல பல தரமான படங்களை நாங்கள் கொடுக்க ரெடியாக இருக்கிறோம்.” என்றார்.

 

நடிகை சப்னா தாஸ் பேசுகையில், “எனக்கு இது தான் முதல் படம். அதேபோல், நான் இப்போது தான் முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன். பல பகுதிகளுக்கு நான் பயணித்துள்ளேன். ஆனால், சென்னை மக்கள் ரொம்பவே இனிமையானவர்களாக இருக்கிறார்கள். அதனால், சென்னைக்கும், சென்னை மக்களுக்கும் நன்றி. ‘வரிசி’ படத்தில் கதாநாயகியாக நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து பேசும் இந்த படம், சஸ்பென்ஸ், திகில் நிறைந்த விறுவிறுப்பான படம். ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

 

நிகழ்ச்சியில் பேசிய பத்திரிகையாளர் ‘தேவி’ மணி, “படத்தின் பாடல் காட்சிகளையும், டிரைலரையும் பார்க்கும் போது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிகிறது. இந்த படத்தில் உள்ள அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும், அவர்களுடைய படைப்பு அனுபவம் வாய்ந்தவர்களால் உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. அதனால், படம் நிச்சயம் வெற்றி பெறும்.” என்றார்.

 

Varisi

 

மிதுன் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷெரீப் மொய்தீன் நடனம் அமைத்துள்ளார். கேடி படத்தொகுப்பு செய்ய, மேட்டூர் செளந்தர் கலையை நிர்மாணித்துள்ளார். சண்டைப்பயிற்சியை நைப் நரேன் கவனிக்க, சரவணகுமார் ஒலிப்பதிவு செய்துள்ளார். சவுண்ட் டிசைன் பணியை அன்பரசன் கவனிக்க, நடிகர்கள் தேர்வு பணியை பாலாஜி ராஜசேகர் கவனித்துள்ளார்.

 

‘வரிசி’ என்றால் தூண்டில் என்று அர்த்தமாம்.