Dec 29, 2018 02:14 PM

’பேட்ட’ படத்திற்காக நடத்தப்படும் கார் ரேஸ்!

’பேட்ட’ படத்திற்காக நடத்தப்படும் கார் ரேஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடைந்திருக்கும் இந்த டிரைலர் மூலம் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

 

இதற்கிடையே ‘பேட்ட’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட மலேஷியாவை சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் உரிமம் பெற்றுள்ளது. இந்தியாவை தவிர பிற வெளிநாடுகளில் இந்நிறுவனம் தான் பேட்ட படத்தினை வெளியிடுகிறது.

 

இந்த நிலையில், பேட்ட படத்தின் விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் மேற்கொண்டு வரும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன், டிசம்பர் 29, 30 ஆகிய இரு தினங்களில் மலேசியாவில் நடைபெறும் ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேஸில் பங்கேற்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இந்திய வீரர் தர்ஷன் ராஜ் என்ற 19 வயது இளைஞர் போட்டியில் கலந்துக்கொள்ள, இந்த ரேஸில் மலேசியாவில் உள்ள டாப் 20 ரேஸ் வீரர்கள் கலந்துக்கொள்கிறார்கள்.

 

மேலும், இப்போட்டியில் பங்கேற்கும் கார்கள் அனைத்திலும் ‘பேட்ட’ படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெருமை இப்படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதேபோல், மலேசியா முழுவதும் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

 

இது குறித்து கூறியிஅ மாலிக் ஸ்டிரீம் கார்ப்பரேஷன் நிறுவன இயக்குநர் மாலிக் கூறுகையில், “இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்லாமல், இது போன்ற விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் நிச்சயம் ஊக்குவிக்கும்.” என்றார்.

 

ரஜினிகாந்தின் படங்களிலேயே விளம்பரத்தில் உச்சத்தை தொட்ட படமாக ‘கபாலி’ இருந்து வந்த நிலையில், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷனின் இத்தகைய நடவடிக்கையால் தற்போது கபாலியை ‘பேட்ட’ படத்தின் விளம்பரம் மிஞ்சிவிட்டது என்றே சொல்லலாம்.