Mar 30, 2022 10:12 AM

பெண்களின் ஓரின சேர்க்கை! - இயக்குநர் ராம்கோபால் வர்மா எதிர்கொண்ட சவால்கள்

பெண்களின் ஓரின சேர்க்கை! - இயக்குநர் ராம்கோபால் வர்மா எதிர்கொண்ட சவால்கள்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மட்டும் இன்றி, திரைத்துறையில் அவ்வபோது வித்தியாசமான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா. தற்போது இவர் இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவான ‘டேஞ்சரஸ்’ என்ற படத்தை தமிழில் ‘காதல் காதல்தான்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறார்கள்.

 

ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இப்படத்தில் நைனா கங்குலி, அப்சரா இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராஜ்பால் யாதவ், காஸி, மிதுன் புரந்தாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘காதல் காதல்தான்’ படக்குழு படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்கள்

 

பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து கூறிய இயக்குநர் ராம்கோபால் வர்மா, “இந்தப்படத்தின் ஐடியா எனக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம், ஓரின சேர்க்கையாளர்களை நாம் பரிதாபமாக தான் பார்க்கிறோம், அரசாங்கமே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை, ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது, அதை மாற்றலாம் என்று தான் இதை எழுதினேன். இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும் போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம். முதலில் நைனா கங்குலி இதற்கு தயங்கினார் அவருக்கு ஐடியா பிடித்திருந்தது ஆனாலும் தயக்கம் இருந்தது. அதன் பிறகு ஒப்புக்கொண்டார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹிரோயின்களை வைத்து டூயட்  பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின்  தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. படம் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

 

Kadhal Kadhalthan

 

நாயகி நைனா கங்குலி பேசுகையில், “ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப்படத்தில்  நடிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன் நாயகி காதலிப்பார்கள், ஆனால் இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இதில் நடிப்பது எனக்கு மிகுந்த  சவாலாக இருந்தது. இந்தப்படம் ஆரம்பித்த போது, நான் ஆண் போல் நடிக்க வேண்டும் என்றார், அதற்காக நான் சில பயிற்சிகளை மேற்கொண்டேன், ஆண்களின் உடல் மொழிகளை பார்த்து கற்றுக்கொண்டு நடித்திருக்கிறேன். இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையை சொல்லும் இந்தபடத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.” என்றார்.

 

மற்றொரு நாயகி அப்சரா ராணி பேசுகையில், “இங்கு இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு, தமிழில் இந்தப்படம் வெளியாவது மிக மகிழ்ச்சி. காதல் காதல் தான் மூலம் நான் இங்கு அறிமுகமாவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இங்கு நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். படம் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றியது. இது நம் சமூகத்தில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா சாரின் தெளிவான பார்வை என்னை வியக்க வைத்தது. ஓரின சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் கடவுளின் குழந்தைகள் தான். இது ஒரு கமர்ஷியல் படம், இதில் இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹிரோயின்களுக்கிடையே டூயட் சாங் இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. ராம் கோபால் சாருக்கு நன்றி. எல்லோரும் படம் பாருங்கள்.” என்றார்.

 

ஆர்ட்சீ மீடியா (Artsee Media) மற்றும் ரிம்பி ஆர்ட்ஸ் (Rimpy Arts International) இண்டர்நேஷ்னல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை தமிழகத்தில் குரபரன் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிரது.