Nov 27, 2018 10:42 AM

15 வருட காத்திருப்பு, 51 மொட்டை, 8 மணி நேர மேக்கப்! - ‘ராட்சசன்’ சரவணனின் வலி நிறைந்த பயணம்

15 வருட காத்திருப்பு, 51 மொட்டை, 8 மணி நேர மேக்கப்! - ‘ராட்சசன்’ சரவணனின் வலி நிறைந்த பயணம்

தமிழ் சினிமாவுக்கு கடந்த நான்கு மாதங்கள் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் நிலையில், யாரும் எதிர்ப்பார்க்க முடியாத வெற்றியை ‘ராட்சசன்’ படம் பெற்றிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது என்று சொல்வதை விட, படத்தில் இடம்பெற்ற வில்லன் கதாபாத்திரம், அதாவது டைடில் கதாபாத்திரமான ‘கிரிஸ்டோபர்’ மற்றும் அவரது அம்மாவாக நடித்த ‘மேரி பெர்னாண்டோ’ என்ற கதாபாத்திரங்கள் பெற்ற வெற்றி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

 

பொதுவாக கொடூர வில்லன்களைப் பார்த்தால் பயந்து நடுங்கும் பெண்கள், இந்த கிரிஸ்டோபரையும், மேரி பெர்னாண்டோவையும் பார்த்து பயந்து நடுங்கினாலும், அதே சமயம் விரும்பி ரசிக்கவும் செய்தார்கள் என்பது தான், யாரலும் நம்ப முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. பெரியவர்கள் மட்டுமா! குழந்தைகளிடமும் இந்த கிரிஸ்டோபர் வேடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூச்சாண்டிக்கிட்ட புடிச்சி கொடுத்துடுவேன்...என்று குழந்தைகளிடம் சொல்லிய தாய்மார்கள், தற்போது “கிரிஸ்டோபரிடம் புடிச்சி கொடுத்துடுவேன்” என்று சொல்றாங்கனா பாத்துக்குங்க, அப்படி ஒரு வரவேற்பை பெற்றிருக்கும் இந்த கிரிஸ்டோபர் மற்றும் மேரி பெர்னாண்டோ கதாபாத்திரத்தில் நடித்தவர் யார்? என்பதையும், அவரையும் படக்குழு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

 

Saravanan Ratchasan

 

‘நான்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்த ‘நான்’ சரவணன் தான் அந்த கிரிஸ்டோபர் வேடத்தில் நடித்தவர். ‘நான்’ படத்தில் அவர் முகம் தெரிந்தாலும், தனது முகம் தெரியாத பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் சரவணன், கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கிறார்.

 

அரியலூரை அடுத்துள்ள வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன், திருச்சியில் டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், சினிமா மீதுள்ள ஆர்வத்தின் பேரில் சென்னைக்கு பஸ் ஏறியுள்ளார். தெரியாத ஊரில் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த சரவணனுக்கு, அவரது அப்பாவின் நண்பரான சினிமா பி.ஆர்.ஓ கோவிந்தாரஜ், சினிமா என்றால் என்ன, எப்படிப்பட்ட கஷ்ட்டங்கள் இருக்கும், என்பதை அவருக்கு விவரிக்க, அனைத்தையும் தாங்கிக்கொள்வேன், என்ற மன உறுதியுடனும், அவரது வழிகாட்டுதல்படியும் கடந்த 15 ஆண்டுகளாக கோடம்பாக்கத்தில் பயணித்த சரவணனுக்கு, விஜய் சேதுபதி, சூரி, முனிஷ்காந்த் ராமதாஸ், காளி வெங்கட் ஆகியோரது நட்பு கிடைக்க, அவர்களுடன் சேர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தவர், நடிப்பு வாய்ப்பு இல்லாத போது டப்பிங் பேசி காலத்தை ஓட்டியவர், என்ன ஆனாலும் சினிமாவை விட்டு மட்டும் போவதில்லை, என்பதில் உறுதியாக இருந்தார்.

 

சரவணனுடன் வாய்ப்பு தேடி கஷ்ட்டப்பட்ட அனைவரும் தற்போது நடிகர்களாக வெற்றி பெற்று பிரபலமாகிவிட, தனக்கும் சரியான வாய்ப்பு அமையும் என்று காத்திருந்த சரவணனுக்கு அந்த வாய்ப்பை ‘ராட்சசன்’ மூலம் இயக்குநர் ராம்குமார் வழங்கியிருக்கிறார்.

 

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி திரையுலகினரிடமும், ரசிகர்களிடமும் பாராட்டு பெற்று வரும் சரவணனிடம் பேசிய போது, ‘முண்டாசுப்பட்டி’ படத்திலேயே எனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டியது. ஆனால், நான் பார்க்க கொஞ்சம் கலரா மாடர்னா இருந்ததால வாய்ப்பு கிடைக்கல, இருந்தாலும், தனது அடுத்த படத்தில் நல்ல கேரக்டரா கொடுக்குறேன்னு, அப்போதே சொன்ன இயக்குநர் ராம்குமார், சொன்னது போலவே எனக்கு மிகப்பெரிய கேரக்டரை கொடுத்தாரு.

 

Director Ramkumar and Saravanan

 

இந்த கேரக்டர் தான், என்று என்னிடம் சொல்லாமல், எய்ட்ஸ் நோயாளி போல உடல் எடையை குறைக்க வேண்டும், மொட்டையடிக்க வேண்டும், உங்க முகம் ஆடியன்ஸுக்கு தெரியாது, என்று மட்டும் சொன்னார். மறுநாளே நான் மொட்டையடித்துக் கொண்டு அவர் முன்பு நின்னுட்டேன். “அடிக்கனும்னு தானே சொன்னேன், அதுக்குள்ளவா!” என்று ஆச்சரியப்பட்டவர், என்னை தொடர்ந்து சோதித்து பார்த்தார், அவரது சோதனை அனைத்திலும் நான் பாஸானதால, என்னிடம் நான் நடிக்கப் போகும் கேரக்டர் பற்றி சொன்னதோடு, அந்த கேரக்டருக்காக என்னை தயாராகவும் சொன்னார்.

 

கிரிஸ்டோபர் கதாபாத்திரத்திற்காக ஒரு மாதத்தில் 19 கிலோ உடல் எடையை குறைத்ததோடு, படத்தில் நடித்து முடிக்கும் வரை உடல் எடையை குறைத்துக் கொண்டு தான் இருந்தேன். மேலும், அந்த மேக்கப்புக்காக 51 முறை மொட்டையும் அடித்திருக்கிறேன். பொதுவாக, அப்படிப்பட்ட மேக்கப் போடுபவர்கள் சுமார் இரண்டு முதல் இரண்டரை மணிவரை தான் தாங்குவார்கள், ஆனால் நான் ஆறு மணி முதல் எட்டு மணி வரை அந்த மேக்கப்பை போட்டுக்கொண்டு இருந்திருக்கிறேன். சில சமயங்களில் உயிர் போகும் அளவுக்கு வலி ஏற்பட்டாலும், இயக்குநர் ராம்குமார் சார், என் மேல் வைத்த நம்பிக்கைக்காகவும், 15 வருட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வாய்ப்பு என்பதாலும் அதனை தாங்கிக்கொண்டேன்.

 

Ratchasan Saravanan

 

‘ராட்சசன்’ படத்தில் கமிட்டானதும், எனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. மாப்பிள்ளையாக இருக்க வேண்டிய நான் படத்திற்காக உடல் எடையை குறைத்து நோயாளி போல இருந்ததோடு, பெரிய தொகை ஒன்றை கடனாக வாங்கிக் கொண்டு, வேறு எந்த வேலையும் செய்யாமல் முழுமையாக ராட்சசனுக்காகவே என்னை தயார் படுத்துக்கொண்டிருந்தேன். காலை முதல் இரவு வரை சாலிகிராமத்தில் சாலைகளில் நடை பயிற்சி உள்ளிட்ட பல வகையில் எனது உடல் எடையை குறைத்தேன், என்று தனது வலிகள் நிறைந்த பயணம் பற்றி கூறினார்.

 

Ratchasan Saravanan

 

கிரிஸ்டோபர் வேடத்தில் நடித்தது சரவணன் தான், என்று மக்களுக்கு தெரிந்த பிறகு, சரவணன் அனுபவித்த வலிகள் அத்தனையும் தற்போது வாழ்த்துகளாக மாறியிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் அல்ல, அண்டை மாநிலமான கேரளாவிலும் சரவணனுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது.

 

தற்போது சமூக வலைதளத்தின் டிரெண்டிங்காகியிருக்கும் கிரிஸ்டோபர் சரவணனை வைத்து ரசிகர்கள் மீம்ஸ்கள், வீடியோ மீம்ஸ்கள், போஸ்டர்கள் என்று பலவற்றை வெளியிட்டு வருவதோடு, பலர் அவர் வீடு தேடி வந்து அவரை பாராட்டி செல்கிறார்கள். மேலும், கேரளா பிரஸ் கிளப்பில் இருந்தும் சரவணனை அழைத்து பாராட்ட காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தற்போது பல வாய்ப்புகள் சரவணனை தேடி வருவதோடு, இயக்குநர் ராம்குமார் தனது அடுத்த படத்திலும் ஒரு முக்கியமான கேரக்டரை சரவணனுக்கு கொடுப்பதாக கூறியிருக்கிறார்.

 

Naan Saravanan

 

இப்படி, தனது முகம் தெரியாத ஒரு வேடத்தில் தனது நடிப்பு மற்றும் பாடி லேங்குவேச் மூலம் மிரட்டியிருக்கும் இந்த ‘ராட்சசன்’சரவணனின் மிரட்டல் இன்னும் பல படங்களில் தொடர வாழ்த்துகள்.