Oct 04, 2018 07:00 PM

‘நோட்டா’ படத்திற்காக சிம்பொனி இசையை உருவாக்கிய சாம் சி.எஸ்!

‘நோட்டா’ படத்திற்காக சிம்பொனி இசையை உருவாக்கிய சாம் சி.எஸ்!

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகுந்த இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் சாம் சி.எஸ். தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், பின்னணி இசையில் கைதேர்ந்தவராக இருப்பதோடு, திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் இசையமைப்பதால், இவரை இயக்குநர்கள் கூட்டம் சூழத்தொடங்கியுள்ளது.

 

அந்த வகையில், நாளை (அக்.5) உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘நோட்டா’ படத்திற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறதோ, அதுபோல அப்படத்தின் இசை மீதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

 

தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக குறுகிய காலத்தில் வளர்ந்திருக்கும் விஜய் தேவரக்கொண்டா, அறிமுகமாகும் தமிழ்ப் படமான ‘நோட்டா’, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நாளை வெளியாகிறது.

 

இப்படத்தில் சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்று இயக்குநர் ஆனந்த் சங்கர், ஏற்கனவே கூறியிருந்த நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ், சிம்பொனி இசையை உருவாக்கியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

 

இது குறித்து கூறிய சாம் சி.எஸ், “பல ஆண்டுகளாக நான் ஒரு விஷயத்தை செய்யும் கனவில் இருந்து வந்தேன். இறுதியாக, நோட்டா படத்தின் மூலம் அதை நனவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவர் எனக்கு முழு சுதந்திரம் கொடுக்காமல் இருந்திருந்தால், இது சாத்தியமே இல்லை. இந்த படத்தக்கு பிரமாண்ட ஆர்க்கெஸ்ட்ரா இசைக்கோர்ப்பு செய்யும் யோசனையை நான் கூறிய போது, எந்தவித மறுப்பும் சொல்லாமல் உடனடியாக ஒப்புக் கொண்டார்.

 

”ஏ ரைஸ் ஆப் ஏ லீடர்” (A RISE OF A LEADER) என்ற இந்த  பாடலில் சூழல் ஒரு ஆழ்ந்த, சக்தி வாய்ந்த இசையை கோரியது. இயக்குநர் ஆனந்த் ஷங்கருடன்  இதைப் பற்றி பேசுகையில், இந்த இடத்தில் மாசிடோனியா சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா இருந்தால் படத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்தும் என்று உணர்ந்தேன். ஸ்ட்ரிங்ஸ் மற்றும்  பிராஸ் இசைக்கலைஞர்கள் 150க்கும் மேற்பட்டோர் பின்னணி இசையில், குறிப்பாக இந்த பாடல் இசைக்கோர்ப்பில் பங்கு பெற்றனர்.

 

நோட்டா பின்னணி இசை மிக பிரம்மாண்டமாக இருக்கும். நான் சாதாரணமாக சொல்லவில்லை, படத்தில் உள்ள காட்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன, அதனால் அவற்றிற்கு பொறுத்தமான இசையை வழங்க, நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது.

 

கதை மற்றும் காட்சிகள் என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய உந்திய அதே நேரத்தில், விஜய் தேவரகொண்டாவின் திரை ஆளுமை என்னை இன்னும் அடுத்த கட்டத்துக்கு தள்ளியது. மேலும், NOTA ஒரு தான் அவரின் காதல் நாயகன் என்ற முத்திரையை உடைத்து, நெருக்கமான, யதார்த்தமான கதாபாத்திரத்தில் அவரை முன்னிறுத்தியிருக்கும் முதல் படம். இது ஒரு இருமொழி திரைப்படமாக இருப்பதால், இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில்  இசையமைக்க வேண்டியிருந்தது. அதை செய்திருக்கிறேன் என நம்புகிறேன்.” என்றார்.