Mar 08, 2021 11:20 AM

’சாரிகா’ குறும்படத்தை சர்வதேச அளவில் எடுத்து செல்லலாம் - பிரபலங்கள் பாராட்டு

’சாரிகா’ குறும்படத்தை சர்வதேச அளவில் எடுத்து செல்லலாம் - பிரபலங்கள் பாராட்டு

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படம் ‘சாரிகா’. சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இக்குறும்படத்தில் மாஸ்டர் மகேந்திரன், ஜான்வி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பேபி மோனிகா, ஸ்ரீ ரஞ்சனி, ராமநாதன், கயல் மணி, அரவிந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்.

 

போதி தொண்டு அறக்கட்டளை தயரித்துள்ள ‘சாரிகா’ குறும்படத்தை பாரதி பாலா இயக்கியுள்ளார். டேவிட் பரத்குமார் இசையமைக்க, சமூக ஆசிரியர் சபரிமாலா பாடல் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ சங்கர் மஹாதேவன் பாடல் பாடியுள்ளார்.

 

’சாரிகா’ குறும்படத்தின் வெளியீட்டு மற்றும் திரையிடல் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. நடிகர்கள் மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், இசையமைப்பாளர் தீனா, சென்னை குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். வரவேற்புரை நிகழ்த்திய ஆனந்தி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார்.

 

Sarica Short Film

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “இது ஒரு இனிமையான மாலை பொழுதாக இருந்தாலும், இந்த குறும்படம் சோகமான மாலைப் பொழுதாக மாற்றிவிட்டது. காரணம், நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. இப்படிப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். இந்த படத்தை சிறப்பாக தயாரித்திருக்கிறார்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அவர்களது குடும்பத்தாரே இருப்பதை ரொம்ப அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இந்த குறும்படம் மிக சிறப்பாக உள்ளது.” என்றார்.

 

இசையமைப்பாளர் தீனா பேசுகையில், “சாரிகா குறும்படம் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை வெளி உலகிற்கு காட்டுவது மட்டும் அல்ல, சிறு வயதில் பாலியல் துன்பங்களுக்கு ஆளாகும் குழந்தைகள் மன ரீதியாக எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், என்பதை காட்டியிருக்கும் இந்த குறும்படத்தை சர்வதேச அளவுக்கு எத்துச் செல்லலாம். அதற்கு செய்ய வேண்டியது, படத்தில் இருக்கும் சில சினிமாத்தனமான காட்சிகளை நீக்கிவிட்டு, செய்தி கோர்ப்பு காட்சிகளை சேர்க்க வேண்டும். அப்படி செய்தால், சாரிகா குறும்படம் ஐக்கிய சபையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும். டேவிட் பரத்குமாரின் இசை சிறப்பாக உள்ளது. குறிப்பாக அந்த ஒரு பாடல், பெண் குழந்தைகளின் குரலாக ஒலிக்கிறது. பாடல் எழுதிய சபரிமாலா மற்றும் பாடிய சங்கர் மஹாதேவன்ஜி இருவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

‘சாரிகா’ படத்தை தயாரித்து இசையமைத்திருக்கும் டேவின் பரத்குமார் பேசுகையில், “ஸ்டாண்ட் அகய்ண்ட்ஸ்ட் சைல்டு அபியூஸ் என்பதன் சுருக்கம் தான் சாகா. இதை என் அலுவலக டையில் தான் முதன் முதலில் எழுதினேன். பிறகு நானும் ஆனந்தி மேடமும் என் காரில் சென்றுக் கொண்டிருந்த போது, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்து பாடல் ஒன்று கேட்டார். அப்போது நான் ஒன் லைன் கேட்டேன். அவர் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான தீர்வாக பாடல் இருக்க வேண்டும் என்றார். நான், அந்த வலியை வெளி உலகிற்கு சொல்லும் பாடலாக இருக்க வேண்டும், என்று கூறினேன். பிறகு இருவரும் சேர்ந்து பல கருத்துக்களை விவாதித்து உருவாக்கிய பாடல் தான் “கண்ணீரோடு தேவதை....” பாடால்.

 

பாடல் உருவானது ஒரு பக்கம் இருந்தாலும், நல்ல விஷயங்கள் செய்ய நாம் எப்படி கஷ்ட்டப்பட வேண்டும், என்பதை நான் சாரிகா படம் தயாரிக்கும் போது தான் உணர்ந்தேன். இந்த படத்தை இங்கு நான் கொண்டு வர மூன்று வருடங்கள் கஷ்ட்டப்பட்டேன். இன்று நடக்கும் விழாவை ஏற்பாடு செய்வதற்கும் பல கஷ்ட்டங்களை எதிர்கொண்டேன். ஆனால், அதையும் தாண்டி இன்று விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருக்கும் பிரபலங்கள் அனைவருக்கும் எனது நன்றி.

 

இந்த பாடலையும், குறும்படத்தையும் எடுக்க நான் பலரிடம் உதவி கேட்டேன், ஆனால் யாரும் உதவவில்லை. சமூகத்தில் தங்களை சிறந்த மனிதர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் காண்பித்து கொள்ளும் பல பெரியவர்கள் எனக்கு ஒத்துழைக்க மறுத்தது மன வேதனையாக இருந்தது. அதில் முதலானவர் பர்வீன் சுல்தானா. பிரபல கவிஞரான அவரிடம் பாடல் எழுத கேட்டேன். அனைத்தையும் கேட்டவர் பிறகு மறுத்துவிட்டார். அவர் ஏன் மறுத்தார் என்பதற்கான காரணத்தை கூட சொல்லவில்லை. பிறகு ஆசிரியர் சபரிமாலா அவர்களை அணுகினோம். அவர் பாடல் எழுதினார். இந்த பாடலில் இருந்த வரிகளை பலர் எழுதினாலும், சபரிமாலா தான் பாடல் எழுதினார் என்று சொல்வேன். ஆனால், அதன் பிறகு அவர் எங்களுடன் கைகோர்க்க விரும்பவில்லை. எங்களை நட்டாத்தில் விட்டு சென்றார். பிறகு இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் ஆரி. சமூக அக்கறை கொண்டவராக பல இடங்களில் தன்னை காண்பித்துக் கொள்ளும் ஆரியிடம் இப்படம் குறித்து பேசிய போது, பல மாற்றங்கள் செய்தார். தன்னை ஹீரோவாக முதன்மை படுத்த வேண்டும், என்று கூறினார். இந்த கேமரா தான் வேண்டும், என்று சொன்னார். அவர் சொன்ன அனைத்திற்கும் சம்மதம் சொல்லியும், படப்பிடிப்பு ஒரு நாள் முன்னதாக பிக் பாஸுக்கு சென்றுவிட்டார். அவர் செல்லட்டும், வேணாம் என்று சொல்லவில்லை. ஆனால், எங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். பிறகு எப்படியோ கஷ்ட்டப்பட்டு இந்த படத்தை எடுத்து முடித்தோம். முடித்த பிறகும் தொடர்ந்து பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டு தான் இருந்தோம். என்னதான் பிரச்சனைகள் வந்தாலும், இந்த படைப்பை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் ஆர்வமாக இருந்த திருமதி ஆனந்தி மேடமுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.” என்றார்.

 

’சாரிகா’ குறும்படம் இன்று (மார்ச் 8) ஆன்வி மூவிஸ் (ONVI.MOVIES) என்ற ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.