Oct 02, 2018 05:48 PM

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முத்தம் கொடுத்த சீமான்!

இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முத்தம் கொடுத்த சீமான்!

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ இன்னும் சில நாட்களில் தென்னிந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தப் போகிறது. ஆம், ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் விரைவில் ‘பரியேறும் பெருமாள்’ வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை பார்க்க விரும்பியதால், இன்று சென்னையில் படத்தின் பிரத்யேக காட்சிக்கு தயாரிப்பாளர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார்.

 

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,  திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, மதிமுக-வின் துணை பொதுச் செயலாளர் மல்லை. சத்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு திரைப்படத்தினை பார்த்து உணர்ச்சிவசப் பட்டவர்களாக மாறிப்போனார்கள்.

 

Thiruma in Pariyerum Perumal

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒருபடி முன்னே சென்று தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தையும், இயக்குநர் மாரி செல்வராஜியையும் கட்டித் தழுவி, முத்தமிட்டு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

 

தொல்.திருமாவளவன் படம் குறித்து பேசுகையில், “இந்த ‘பரியேறும் பெருமாள்’ ஒரு உலகத்தரம் வாய்ந்த கிளாசிக்கல் சினிமா. ஒவ்வொரு வசனமும், காட்சியும் மிக இயல்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதீதமான கற்பனையோ, அதீதமான காட்சிப் பதிவுகளோ இல்லாமல் உண்மைத்தன்மையுடன் இருக்கிறது இந்தப் படம். சாதீய ஒடுக்குமுறைகள் என்பது ஆண்டாண்டு காலமாக நிலைத்திருக்கும் ஒன்று. இது எவ்வளவு கடுமையான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நாமறிவோம். அந்த சிக்கலை மிக இலகுவாக, முதிர்ச்சியாக, பக்குவமாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். எவர் மனதும் புண்படாத வகையில், சாதியவாதிகளும் உணர்ந்துகொள்ளும் வகையில் இத்திரைப்படத்தை எடுத்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக அளித்திருக்கிறார்கள் நம்முடைய மாரி செல்வராஜ் அவர்களும், பா.இரஞ்சித் அவர்களும். கலைத்துறையின் வாயிலாக இவர்களால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன். ‘பரியேறும் பெருமாள்’ அனைத்து தரப்பினராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியிருக்கிறது.” என்றார்.

 

Velmurugan in Pariyerum Perumal

 

சீமான் படம் குறித்து பேசுகையில், “நிறைய படம் பார்த்து விட்டு இது படமல்ல பாடம் என்று சொல்வோம். ஆனால், இந்த ‘பரியேறும் பெருமாள்’ படம் பார்க்கும் போது, அவையெல்லாம் எவ்வளவு பொய்யான வார்த்தைகள் என்பது புரிகிறது. உண்மையிலேயே அப்படி சொல்ல வேண்டுமெனில் இந்த படத்தை சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் திரையில் ஒரு புரட்சியை இந்தப் படம் செய்திருக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் தன்னுடைய வயது, அனுபவம் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு ஆகச்சிறந்த படைப்பை தமிழ்ச் சமூகத்திற்கு தந்திருக்கிறார். மிகப்பெரிய பெரிய தாக்கத்தையும், வலியையும் இந்தப்படம் கடத்தி இருக்கிறது. ஒரு படைப்பாளியாக மாரி செல்வராஜும், ஒரு தயாரிப்பாளராக பா.இரஞ்சித்தும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நம் தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.” என்றார்.

 

Poovai Jegan in Pariyerum Perumal

 

இதேபோல், ஜி.ராமகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்கள் படத்தையும், இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படத்தை தயாரித்த பா.ரஞ்சித்தையும் வெகுவாக பாராட்டினார்கள்.