Nov 01, 2018 02:16 AM

தியேட்டர் கிடைக்காததால் பின் வாங்கிய ‘திமிரு புடிச்சவன்’ விஜய் ஆண்டனி!

தியேட்டர் கிடைக்காததால் பின் வாங்கிய ‘திமிரு புடிச்சவன்’ விஜய் ஆண்டனி!

சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி என்று தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி, எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்க, அவர் பெரிதும் நம்பியிருப்பது ‘திமிரு புடிச்சவன்’ படத்தை தான்.

 

ஸ்ரீகாந்த், சுனைனா நடித்த ‘நம்பியார்’ என்ற படத்தை இயக்கிய கணேஷா இயக்கியிருக்கும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தில் விஜய் ஆண்டனி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜும் போலீஸ் வேடத்தில் தான் நடித்திருக்கிறார்.

 

‘திமிரு புடிச்சவன்’ தீபாவளிப் பண்டிகையன்று வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், தீபாவளி பண்டிகைக்கும் படத்தின் கதைக்கும் சிறிது சம்மந்தம் இருப்பதாலும், படம் முடிந்த பிறகு அதை ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்க வேண்டாம் என்ற என்னத்திலும் தான், தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக கூறிய விஜய் ஆண்டனி, ஏற்கனவே தான் நடித்த தோல்விப் படன்களால் ஏற்பட்ட கடனை சமாளிப்பதற்காகவும் ‘திமிரு புடிச்சவன்’ படத்தை உடனடியாக ரிலீஸ் செய்வதாகவும் கூறினார்.

 

இந்த நிலையில், ‘திமிரு புடிச்சவன்’ படத்தின் சரியான திரையரங்கங்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான திரையரங்கங்கள் விஜயின் ‘சர்கார்’ படத்திற்கே ஒதுக்கப்படுவதால், தியேட்டர் கிடைக்காமல் திமிரு புடிச்சவன் திணறிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருந்து விஜய் ஆண்டனி பின்வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், தற்போது ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கான புரோமோஷன் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டது.