May 21, 2020 05:19 AM

60 வது பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால்!

60 வது பிறந்தநாள் கொண்டாடும் மோகன்லால்!

இந்திய சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் மோகன்லால், மலையாள சினிமாவின் உச்ச நடிகர் ஆவார். மலையாளம் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர், 5 தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியிருக்கிறார்.

 

நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் பாடகர் என்று திரையுலகில் பல பரிணாமங்களை எடுத்திருக்கும் மோகன்லால், இன்று அகவை 60-ல் அடியெடுத்து வைக்கிறார். மோகன்லாலு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதோடு, அவரைப் பற்றிய சிறு பதிவு இதோ,

 

கேரளாவில் மாநில மல்யுத்த வீரரான மோகன்லால், 1980 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ (Manjil Virinja Pookkal) என்ற மலையாளப் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்த மோகன்லால் சுமார் 20 படங்களில் வில்லனாக நடித்து வந்த நிலையில், 1986 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாவிண்டே மகன்’ (Rajavinte Makan) என்ற படத்தின் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்றதோடு, ஹீரோவாக தொடர் வெற்றிகளையும் கொடுத்தார்.

 

Mohanlal

 

மலையாளம் மட்டும் இன்றி, தமிழில் ‘இருவர்’, தெலுங்கில் ‘ஜனதா கேரேஜ்’, இந்தியில் ‘கம்பெனி’ ஆகிய படங்கள் மூலம் பிற மொழிகளிலும் முக்கிய நடிகராக உயர்ந்த மோகன்லால், தற்போதும் ஹீரோவாக மலையாளத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதோடு, தமிழிலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.