அஜித் பிறந்தநாளை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித் ஆகியோரது ரசிகர்கள் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். சமூக வலைதளங்களில் நடைபெறும் இவர்களது மோதலுக்கு பலர் கண்டனமும் தெரிவிப்பார்கள். அஜித்தை பற்றி விஜய் ரசிகர்களும், விஜயை பற்றி அஜித் ரசிகர்களும் எதாவது கலாய்த்து அதை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி ஒருவரை ஒருவர் பழி தீர்த்தும் கொள்வார்கள்.
இப்படி மோதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த இரு தரப்பு ரசிகர்கள் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு விஷயத்தை டிரெண்டாக்கி வருகிறார்கள்.
அஜித்தின் பிறந்தநாளான (மே 1) இன்று சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் ரசிகர்களும் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, #NanbarAjith என்ற ஹஷ்டாக்கை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய், கோட் கோட் சூட் டிரெஸ் போட்டதற்கான காரணத்தை கூறும் போது, “நண்பர் அஜித் போல கோட் சூட் போட்டிருக்கிறேன்” என்று கூறியதை அஜித் ரசிகர்கள் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.